Total Pageviews

Sunday, March 2, 2014

மகாகுரு ஆஞ்சநேயர் ஜயந்தி வாழ்த்துகள் !!

(இங்கு க்ளிக் செய்து பாடலை கேட்டுக்கொண்டே படிக்கவும்)

மகாகுரு ஆஞ்சநேயர் ஜயந்தி வாழ்த்துகள் !!

அனுமந்தன்பட்டி ஸ்ரீஆஞ்சநேயர் திருக்கோவில் !!

இக்கோவில் நான் அடிக்கடி செல்லும் கோவில்களில் ஒன்று !

தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் ( கம்பம் சாலையில் ) அடுத்த ஊரில் கால்வாய்க்கரையில் உள்ளது !

இதை ஆரம்பத்தில் சிறு கோவிலாக பிரபலமற்று இருந்தது ! வரலாறு அறியப்படாததால் சுயம்பு என்றும் கூட சொல்லிக்கொண்டார்கள் !

குருராகவேந்திரர் அவரது முந்தய பிறவியில் மத்வாச்சாரியராக குரு விஜயேந்திரராக கர்நாடகத்தில் ஆன்மீகப்பனிகள் செய்ததோடு இந்தியா முழுவதும் பயணம் செய்து மகாகுரு அனுமனுக்கு கோவில்கள் ஸ்தாபித்தார்

விஜயநகர பேரரசின் சார்பில் மதுரை மற்றும் தென் தமிழகத்தை டெல்லி சுல்த்தானின் ஆளுகையிலிருந்து விடுவிக்க படை வந்தபோது காடாக இருந்த தேனி மாவட்டத்தை அவர்கள் முதலில் ஆக்கிரமித்து பின்பு மதுரையை தாக்கினார்கள் !

அப்போது உடன் வந்து இங்கு தங்கியவர்களுள் மார்க்கயன்கோட்டை என்ற கிராமம் மட்டும் மத்வ பிராமணர்களின் கிராமமாக குடி அமர்த்தப்பட்டது

இங்கு இப்போதும் ராகவேந்திரரின் மிருத்யுஞ்ச பிருந்தாவனம் ஒன்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது

இதை ஏன் சொல்லுகிறேநென்றால் குரு விஜயேந்திரர் மார்க்கயன்கோட்டை வந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன அவரின் ஒரு சித்திரம் ஒன்று இங்கு உள்ளது !

அவரால் ஸ்தாபிக்கப்பட்ட மகாகுரு அனுமன் சிலைகளில் வாலில் மணி ஒன்றும் கால்களில் பாதரட்சையும் இருக்கும் என்பது ஒரு குறிப்பு !

இவ்வகையில் அனுமந்தன்பட்டியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சிலையில் இவ்வடையாளங்கள் உள்ளன !

அத்தோடு அக்கோவிலுக்கு சற்று தெற்கே அதே கால்வாய்க்கரையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள (புதுப்பட்டி) விளியல் கல் ராயப்பெருமாள் கோவிலின் கோபுரத்திலும் விஜயேந்திரரரின் உருவம் போல ஒன்று உள்ளது ! பின்னாளில் விபரங்கள் அறிந்தவர் யாரும் இல்லாததால் இவ்வுருவத்திற்கு வெள்ளை வேட்டி கட்டி நம்மாழ்வார் போல மாற்றி விட்டார்கள் ! இக்கோவிலும் மிக ஒதுக்குப்புறமாக இருந்து இப்போதுதான் கொஞ்சம் பிரபலமாகி வருகிறது விளியல் – அழைத்தால் வருகிற பெருமாளின் கோவிலில் நல்ல ஆற்றல் இருப்பதை உணர்கிறேன்  இவ்விரு கோவில்களும் குரு விஜயேந்திரர் அருளால் உண்டானவையே என்பது எனது கணிப்பும் கூட !






மற்றொரு கர்ணபரம்பரை கதையும் ஒன்றுள்ளது ! அது ஸ்ரீஆஞ்சநேயர் முதலான வாணர சேனையினரை ஸ்ரீராமர் சந்தித்த மலை சுருளி மலையே !

நாராயணன் ராமராக அவதரித்த போது அவருக்கு உதவி செய்ய தேவர்கள் அனைவரும் வாணர சேனையினராக பூமியில் அவதரித்தனர் ! அவ்வாறு அவதரித்த தேவர்கள் வாழ்ந்ததாலேயே முப்பத்தி முக்கோடி தேவர்கள் வாழ்ந்த இடம் சுருளி மலை என்றானது !

சுருளி மலையிலும் சஞ்சீவி மூலிகைகள் இருப்பதை பலர் அறிவர் ! ஸ்ரீஆஞ்சநேயர் எடுத்துச்சென்ற சஞ்சீவி மலை இதுதான் என்றும் அவர் திரும்ப கொண்டு வந்து நின்று மீண்டும் வைக்கும்போது நின்ற இடமே அனுமந்தன்பட்டி என்றும் சொல்கிறார்கள் !

அல்லாமலும் சுருளி மலையில் நீண்ட நாட்கள் தவம் செய்து மறைந்து போன பாட்டையா சித்தர் வாழ்ந்த குகைக்கருகில் ஒரு குகையும் அதில் ஸ்ரீஆஞ்சநேயர் சிலையும் அவரால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது !

இது ஸ்ரீஆஞ்சநேயர் தங்கிய குகையாகக்கூட இருக்கும் வாய்ப்பு உள்ளது !




பூம்புகாரில் பிறந்து மதுரையில் வந்து சிலநாட்களில் கணவனை இழந்து மதுரையை எரித்து விட்டு கண்ணகி வைகை ஆற்றின் வழி எதிர் நடந்து சுருளி நதியின் வழியாகவே விண்ணேற்ற மலையை அடைந்தார் ! அதுவும் இதன் தொடர்பு மலையே ! அந்த இடத்தின் அடிவாரம் மறுவி வண்ணாத்திப்பாறை என்று இப்போது அழைக்கப்படுகிறது !

அல்லாமலும் நீத்தார் வழிபாட்டுக்கு உரிய இடமாக இம்மலை நீண்ட காலமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது !

இவையெல்லாம் இம்மலைப்பகுதியின் ஆன்மீக முக்கியத்துவத்தை தெரிவிப்பவையாகவே உள்ளன !

ஆகவே அனுமனதன்பட்டி ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் அருள் ஆற்றல் நிறைந்துள்ள இடமாக உள்ளது என்பதில் சந்தேகமில்லை !

ஸ்ரீ ஆஞ்சநேயர் சிவனின் அவதாரம் என்பதும் அவர் ராம பக்தராக வைஸ்னவராக – சமரச வேதத்தின் முதல் வித்தாவார் ! தன் அவதாரத்தாலேயே அவர் சைவத்தையும் வைணவத்தையும் சமரச படுத்தியவர் !

முஸ்லீம் ஆதிக்கத்தில் இந்து தர்மம் சிதைக்கப்பட்டபோது அதை தென்னிந்தியாவில் தோற்கடித்து வைணவத்தை நிலைநிறுத்திய விஜய நகர பேரரசுக்கு ஆன்மீக பலம் கொடுத்த மத்வ மடங்களின் முதல் ஆச்சாரியாராக அவதரித்தவரும் ஆஞ்சநேயரே !


அத்வைதம் என்பது தியானம் ; தவம் செய்வது ; தனக்குள்ளேயே தேடி தானே கடவுள் என்பதாக உணர்ந்துகொள்வது வெளியே தேடுவது வீண் என்பதாக ஆன்மீக உலகில் ஒரு பெருங்காற்று வீசிக்கொண்டுள்ளது

மறுபுறமோ வெறும் சடங்காகவும் வியாபார பக்தியாகவும் அந்த சடங்கு செய்தால் இது கிடைக்கும் ; இது பரிகாரம் பூசை கோவில் வழிபாடு என்பதுபோல கொடுக்கல் வாங்கல் பக்தியாகவே மட்டும் துவைதம் என்றொரு பெருங்காற்று !

பத்து சித்தர் பாடல்கள் ; கொஞ்சம் ஞானம் ; ரெண்டு தியானம் ; நாலு ஆசனம் ; பிராணாயாமம் ; தவப்பயிற்சி ; எளிய முறை யோகங்கள் ; ஆளாளுக்கு ஒரு குரு என வைத்துக்கொண்டு ஞானமார்க்கத்திலே சிறகடித்து பறப்பவர்களாக தங்களைத்தாங்களே பெருமைப்படுத்திக்கொள்கிரவர்கள் பக்தி என்றவுடன் மட்டமாக பார்க்கும் நிலை !!

இந்த ஒட்டாத பாதைகளில் முன்னேற ; சரீரத்தில் சாதனைக்கு – மன ஒருமைப்பாட்டுக்கு தியானமும் யோகாப்பியசமும் ; ஆத்மாவிலே கறைகளை – இயலாமையை – பலகீனங்களை களைந்து முன்னேற இறைவனை சரணாகதி அடையும் பக்தியும் வேத உபாசனையும் அவசியம் அதாவது ஞானத்துடன் கூடிய பக்தி என்ற விசிஷ்டாத்வைதம் என்ற தத்துவார்த்தம் மத்வராக முன் வைக்கப்பட்டது ! ஸ்ரீ ஆஞ்சநேயரால் உண்டான சமரச வேதத்தின் வளர்ச்சி இது !

குருகீதை 13 . புவனங்கள் அனைத்தின் வளர் சிதை மாற்றங்களின் அளவுகோலாகவும் ;கருணாரசத்தின் பிரவாகமாகவும் ; சகல மார்க்கங்களையும் உலகில் ஆங்காங்கு தோற்றுவித்தவரும் ; ஒன்றுக்கொன்று முரண்பாடுகளாக தெரியும் தத்வ மாலைகளின் மத்யஸ்தரும் (சமரச வேதம் ) ; சத்,சித்,ஆனந்தம் (பரமாத்மா , ஜீவாத்மா . பேரானந்தம் ) ஆகியவைகளின் ஒத்ததிர்வை உலகிற்கு உபதேசிக்க வல்லவருமான சற்குருவின் அருட்பார்வை எப்போதும் ஏன் மீது நிலைத்திருக்கட்டும் !!    

பல மத்வாச்சாரியார்களும் – ஸ்ரீராகவேந்திரரின் மடம் வரை ஒரு முக்கியமான குரு சீட பரம்பரையின் மகாகுரு ஸ்ரீ ஆஞ்சநேயரே என்பதை உணர்ந்துகொள்வது அவசியம் !

மத்வம் என்றால் நடுப்பாதை ! சமாதானப்பாதை ! சாத்வீகப்பாதை ! சமரச வேதம் !!

மத்வம் சைவத்தையும் வைணவத்தையும் சமரசப்படுத்துதுகிறது ! மத்வம் அத்வைதத்தையும் துவைதத்தையும் சமரசப்படுத்த்கிறது !!

இதுவே வளர்ச்சியில் உலகம் முழுமையும் வந்துள்ள அனைத்து வேதங்களையும் – இந்து , முஸ்லிம் , கிறிஸ்தவம் , புத்தம் , சமணம் என அனைத்து மார்க்கங்களையும் சமரசப்படுத்தப்போவது – சமரச வேதம் !


சைவத்தின் வளர்ச்சியில் குரு வள்ளலார் இந்த சமரச வேதத்தை உணர்ந்து சித்தி அடையும்போது அருட்பெருஞ்சோதி என்றும் வரப்போகிற சமரச வேதம் என்றும் முன்னறிவித்தார்

ஆன்மீக உலகில் – வாழ்வில் ஒரு சாதகன் தான் எந்த குருபரம்பரையை சேர்ந்தவன் என்பதை சரியாக உணர்த்தப்பட்ட பிறகே வளர்ச்சி அபிரிதமாக இருக்கும் !

2013 தைப்பூசத்திற்கு முதன்முதலாக வடலூர் சித்தி வளாகத்தில் அமர்ந்து தியானித்தேன் ! சமரச வேதத்தைப்பற்றிய வெளிப்பாடு கிடைத்தது !

அப்படியே மந்திராலயம் செல்லும் வாய்ப்பு உண்டாகி அங்கும் தியானித்தேன் ! சமரச வேதத்தைப்பற்றிய வெளிப்பாடுகளே கிடைத்தது ! மகாகுரு ஆஞ்சநேயரைப்பற்றி அங்குதான் தெளிவாக உணர்ந்தேன் !

அதுவரை நான் பிறப்பால் வைணவக்குடும்பத்தை சேர்ந்தவன் என்ற முறையில் பெருமாள் கோவில்களுக்கு அடிக்கடி செல்பவன் ஆயினும் ஏனோ ஏன் மனம் ஆஞ்சநேயரைப்பற்றி கண்டுகொள்ளவில்லை !

ஆனால் அத்வைத பயிற்சியால் தியானம் சித்தித்த பிறகும் ; வாழ்வின் பலகீனங்களுடன் போராடி போராடி சறுக்கி சிராய்த்துக்கொண்டு பக்தியிலும் சங்கமித்து பெருமாள் கோவிலிலேயே ஒரு ஓரத்தில் அமர்ந்து தியானிக்கும் பழக்கமும் வந்தது ! அப்போதெல்லாம் என்னை அறியாமல் ஆஞ்சநேயரின் அருகாமையில்தான் அமர்ந்து தியானித்துக்கொண்டிருந்திருக்கிறேன் ! ஆனால் அவரைப்பார்த்து வணங்கியது கிடையாது !

அவரை அறியாதவனாக – ஏன் சற்று உதாசீனனாகவும் கூட நான் இருந்தும் மகாகுரு ஆஞ்சநேயர் என்னை ஆதரித்தும் வழிநடத்தியும் வந்திருக்கிறார் ; நான் அவரின் சீடப்பரம்பரையை சேர்ந்தவன் ; அவரின் வழிகாட்டுதலே பிற வேதங்களையும் அறிந்துகொள்ளும் பக்குவத்தை கொடுத்திருக்கிறது என்பதை சில மாதங்களுக்கு முன்பே உணர்ந்தேன் !

வழியில் போகும்போதும் வரும்போதும் பார்த்துக்கொண்டு மட்டுமே சென்றுகொண்டிருந்த அனுமனதன்பட்டி கோவிலுக்குள்ளும் இதன் பிறகுதான் சென்றேன் !

குருவின் அன்பையும் திருவருளையும் உணர்ந்தவனாக அழுது தியானத்தில் ஆழ்ந்து விட்டேன் ! சமரச வேதம் என்ற அந்த இலக்கில் நான் அறியாத பல விசயங்களை நான் எழுதிக்கொண்டுள்ளேன் என்பதுமட்டும் நடந்துகொண்டுள்ளது !

வெறுமையாக்கி ஒப்புக்கொடுப்பது என்பதைத்தவிற நான் ஏதும் செய்யவில்லை – அதுதான் சரணாகதியின் ரகசியம் !

குருவின் மூலமாக கடவுளை எப்போதும் சார்ந்துகொள்கிறேன் !

அனுபவத்தில் உண்டாகி – இப்போது நான் பிரார்த்திக்கும் ஆகமம் ஆவது :



குரு வள்ளலாரை மதிக்கிறேன் !

குரு ராகவேந்திரரை மதிக்கிறேன் !

மகாகுரு ஆஞ்சநேயரை மதிக்கிறேன் !

ஆஞ்சநேயர் மூலமாக சற்குரு நாராயணனை நமஸ்கரிக்கிறேன் !

நாராயணன் நாமத்தினாலே கடவுளை துதிக்கிறேன் !



ஓரிறைவனையே துதிக்கிறேன்

நாராயணன் நாமத்தினாலே

ஓம் நமோ நாராயணா

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி



நாராயணனாய் வெளிப்பட்ட அந்த

ஓரிறைவனையே துதிக்கிறேன்

ஓம் நமோ நாராயணனாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

- இப்படி பிரார்தித்தவாறு தியானத்தில் ஆழ்ந்துவிடுகிறேன் ! இது எனக்கு போதுமானதாகவும் ஞான ரகசியங்களை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது !

இன்று அனுமன் ஜெயந்தி ! அருகிலுள்ள அனுமார் கோவிலுக்கு சென்று மகாகுரு ஆஞ்சநேயரை மதிக்கிறேன் மகாகுரு ஆஞ்சநேயரை மதிக்கிறேன் மகாகுரு ஆஞ்சநேயரை மதிக்கிறேன் மகாகுரு ஆஞ்சநேயரை மதிக்கிறேன் என்று பிராத்தித்து வாருங்கள் !

ஞானமும் பலமும் மரணமில்லா பெருவாழ்வு பெறுவதற்கான மார்க்கத்தை அவர் உபதேசிப்பார் !!