Total Pageviews

Thursday, May 7, 2015

அபிராமி அந்தாதி பாகம் I








காப்பு
தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-
கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே. --- காப்பு


1: உதிக்கின்ற செங்கதிர்உச்சித் திலகம்உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே:


2: துணையும்தொழும் தெய்வமும் பெற்ற தாயும்சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.


3: அறிந்தேன்எவரும் அறியா மறையைஅறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.


4: மனிதரும்தேவரும்மாயா முனிவரும்வந்துசென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.


5: பொருந்திய முப்புரைசெப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே.


6: சென்னியதுஉன் பொன் திருவடித் தாமரைசிந்தையுள்ளே
மன்னியது, உன் திரு மந்திரம்,- சிந்துர வண்ணப் பெண்ணே.-
முன்னியநின் அடியாருடன் கூடி, முறை முறையே
பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே.


7: ததியுறு மத்தின் சுழலும் என் ஆவிதளர்வு இலது ஓர்
கதியுறுவண்ணம் கருது கண்டாய்-கமலாலயனும்,
மதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி, என்றும்
துதியுறு சேவடியாய். சிந்துரானன சுந்தரியே.


8: சுந்தரி எந்தை துணைவிஎன் பாசத்தொடரை எல்லாம்
வந்து அரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்
அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்
கம் தரி கைத்தலத்தாள்-மலர்த்தாள் என் கருத்தனவே


9: கருத்தன எந்தைதன் கண்ணன,வண்ணக் கனகவெற்பின்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்,
முருத்தன மூரலும், நீயும், அம்மே. வந்து என்முன் நிற்கவே.


10: நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.-எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து
அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.


11: ஆனந்தமாய்என் அறிவாய்நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான, சரணாரவிந்தம்-தவள நிறக்
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே.


12: கண்ணியது உன் புகழ்கற்பது உன் நாமம்கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து-நான் முன்செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே. புவி ஏழையும் பூத்தவளே.


13: பூத்தவளேபுவனம் பதினான்கையும்பூத்தவண்ணம்
காத்தவளே. பின் கரந்தவளே. கறைக்கண்டனுக்கு
மூத்தவளே. என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே.
மாத்தவளே. உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே?


14: வந்திப்பவர் உன்னைவானவர் தானவர் ஆனவர்கள்,
சிந்திப்பவர், நல்திசைமுகர் நாரணர், சிந்தையுள்ளே
பந்திப்பவர், அழியாப் பரமானந்தர், பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி. நின் தண்ணளியே:


15: தண்ணளிக்கு என்றுமுன்னே பல கோடி தவங்கள் செய்வார்,
மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம்
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும், அன்றோ?-
பண் அளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.


16: கிளியேகிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே, வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே.-
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே.


17: அதிசயம் ஆன வடிவு உடையாள்அரவிந்தம் எல்லாம்
துதி சய ஆனன சுந்தரவல்லி, துணை இரதி
பதி சயமானது அபசயம் ஆக, முன் பார்த்தவர்தம்
மதி சயம் ஆக அன்றோ, வாம பாகத்தை வவ்வியதே?


18: வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து-
வெவ்விய காலன் என்மேல் வரும்போது-வெளி நிற்கவே.


19: வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்துஎன் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டது, இல்லை, கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுளமோ?-
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.


20: உறைகின்ற நின் திருக்கோயில்-நின் கேள்வர் ஒரு பக்கமோ,
அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ, அமுதம்
நிறைகின்ற வெண் திங்களோ, கஞ்சமோ, எந்தன் நெஞ்சகமோ,
மறைகின்ற வாரிதியோ?- பூரணாசல மங்கலையே.


21: மங்கலைசெங்கலசம் முலையாள்மலையாள்வருணச்
சங்கு அலை செங்கைச் சகல கலாமயில் தாவு கங்கை
பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள்
பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும் பெண்கொடியே.


22: கொடியேஇளவஞ்சிக் கொம்பேஎனக்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே, பனி மால் இமயப்
பிடியே, பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே.
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.


23: கொள்ளேன்மனத்தில் நின் கோலம் அல்லாதுஅன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தே விளைந்த
கள்ளே, களிக்குங்களியே, அளிய என் கண்மணியே.


24: மணியேமணியின் ஒளியேஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே.-
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே.


25: பின்னே திரிந்துஉன் அடியாரைப் பேணிபிறப்பு அறுக்க,
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்,- முதல் மூவருக்கும்
அன்னே. உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே.-
என்னே?-இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே.


26: ஏத்தும் அடியவர்ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம்,- கமழ்பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே.- மணம் நாறும் நின் தாளிணைக்கு என்
நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு, நகையுடைத்தே.


27: உடைத்தனை வஞ்சப் பிறவியைஉள்ளம் உருகும் அன்பு
படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை,- சுந்தரி - நின் அருள் ஏதென்று சொல்லுவதே.


28: சொல்லும் பொருளும் எனநடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே. நின் புதுமலர்த் தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே.


29: சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
சக்தியும், சக்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும், வித்து ஆகி முளைத்து எழுந்த
புத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே.


30: அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய்கொண்டது அல்ல என்கை
நன்றே உனக்கு? இனி நான் என் செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும், கரையேற்றுகை நின் திருவுளமோ.-
ஒன்றே, பல உருவே, அருவே, என் உமையவளே.


31: உமையும் உமையொருபாகனும்ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்யவைத்தார், இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை,
அமையும் அமையுறு தோளியர்மேல் வைத்த ஆசையுமே.


32: ஆசைக் கடலில் அகப்பட்டுஅருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்து, ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்?- ஈசர் பாகத்து நேரிழையே.


33: இழைக்கும் வினைவழியே அடும் காலன்எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து, அஞ்சல் என்பாய். அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே.
உழைக்கும் பொழுது, உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே


34: வந்தே சரணம் புகும் அடியாருக்குவானுலகம்
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும்--சதுர்முகமும்,
பைந் தேன் அலங்கல் பரு மணி ஆகமும், பாகமும், பொற்
செந் தேன் மலரும், அலர் கதிர் ஞாயிறும், திங்களுமே.


35: திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா, எண் இறந்த விண்ணோர்--
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ?- தரங்கக் கடலுள்
வெங் கண் பணி அணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே.


36: பொருளேபொருள் முடிக்கும் போகமேஅரும் போகம் செய்யும்
மருளே, மருளில் வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன்
அருள் ஏது.- அறிகின்றிலேன், அம்புயாதனத்து அம்பிகையே.


37: கைக்கே அணிவது கன்னலும் பூவும்கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை, விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும், பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே.


38: பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும்பனிமுறுவல்
தவளத் திரு நகையும் துணையா, எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணை முலையாள்--
அவளைப் பணிமின் கண்டீர், அமராவதி ஆளுகைக்கே.


39: ஆளுகைக்குஉன்தன் அடித்தாமரைகள் உண்டுஅந்தகன்பால்
மீளுகைக்கு, உன்தன் விழியின் கடை உண்டு, மேல் இவற்றின்
மூளுகைக்கு, என் குறை, நின் குறையே அன்று,-முப்புரங்கள்.
மாளுகைக்கு, அம்பு தொடுத்த வில்லான், பங்கில் வாணுதலே.


40: வாள்-நுதல் கண்ணியைவிண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை, பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை, காணும்--அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ, முன் செய் புண்ணியமே.


41: புண்ணியம் செய்தனமே-மனமே.- புதுப் பூங் குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே.


42: இடங்கொண்டு விம்மிஇணைகொண்டு இறுகிஇளகிமுத்து
வடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் அரவின்
வடம் கொண்ட அல்குல் பணிமொழி--வேதப் பரிபுரையே.


43: பரிபுரச் சீறடிப் பாசாங்குசைபஞ்சபாணிஇன்சொல்
திரிபுர சுந்தரி, சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர, வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச்சிலைக் கை,
எரி புரை மேனி, இறைவர் செம்பாகத்து இருந்தவளே.


44: தவளே இவள்எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே, அவர்தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்,
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,
துவளேன், இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே.


45: தொண்டு செய்யாதுநின் பாதம் தொழாதுதுணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ, இலரோ? அப் பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ, அன்றிச் செய்தவமோ?
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே, பின் வெறுக்கை அன்றே.


46: வெறுக்கும் தகைமைகள் செய்யினும்தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே,-புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே.-
மறுக்கும் தகைமைகள் செய்யினும், யானுன்னை வாழ்த்துவனே.


47: வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன்மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று, விள்ளும்படி அன்று, வேலை நிலம்
ஏழும் பரு வரை எட்டும், எட்டாமல் இரவு பகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.


48: சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார், பின்னும் எய்துவரோ-
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.


49: குரம்பை அடுத்து குடிபுக்க ஆவிவெங் கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது, வளைக்கை அமைத்து,
அரம்பை அடுத்து அரிவையர் சூழ வந்து, அஞ்சல் என்பாய்--
நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே.


50: நாயகிநான்முகிநாராயணிகை நளின பஞ்ச
சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு
வாய் அகி மாலினிவாராகிசூலினிமாதங்கி என்று
ஆய கியாதியுடையாள் சரணம்-அரண் நமக்கே.