Total Pageviews

Friday, May 27, 2016

கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 2






இந்தப்பிளேயரிலும் கேட்கலாம் 
https://ia801500.us.archive.org/5/items/KandakottamDeivamanimaalaiPartII/Kandakottam%20Deivamanimaalai%20Part%20II.ogg

பதிபூசை முதலநற் கிரியையால் மனம்எனும்
பசுகரணம் ஈங்கசுத்த
பாவனை அறச்சுத்த பாவனையில் நிற்கும்மெய்ப்
பதியோக நிலைமைஅதனான்
மதிபாசம் அற்றதின் அடங்கிடும் அடங்கவே
மலைவில்மெய்ஞ் ஞானமயமாய்
வரவுபோக் கற்றநிலை கூடும்என எனதுளே
வந்துணர்வு தந்தகுருவே
துதிவாய்மை பெறுசாந்த பதம்மேவு மதியமே
துரிசறு சுயஞ்சோதியே
தோகைவா கனமீ திலங்கவரு தோன்றலே
சொல்லரிய நல்லதுணையே
ததிபெறும் சென்னையில்  கந்தகோட் டத்துள்வளர்
தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.


காமஉட் பகைவனும் கோபவெங் கொடியனும்
கனலோப முழுமூடனும்
கடுமோக வீணனும் கொடுமதம் எனுந்துட்ட
கண்கெட்ட ஆங்காரியும்
ஏமம்அறு மாச்சரிய விழலனும் கொலைஎன்
றியம்புபா தகனுமாம்இவ்
வெழுவரும் இவர்க்குற்ற உறவான பேர்களும்
எனைப்பற்றி டாமல்அருள்வாய்
சேமமிகு மாமறையின் ஓம்எனும் அருட்பதத்
திறன்அருளி மலயமுனிவன்
சிந்தனையின் வந்தனைஉ வந்தமெய்ஞ் ஞானசிவ
தேசிக சிகாரத்னமே
தாமம்ஒளிர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகர் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.


நிலைஉறும் நிராசையாம் உயர்குலப் பெண்டிரொடு
நிகழ்சாந்த மாம்புதல்வனும்
நெறிபெறும் உதாரகுணம் என்னும்நற் பொருளும்மருள்
நீக்கும்அறி வாம்துணைவனும்
மலைவறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு
மனம்என்னும் நல்ஏவலும்
வருசகல கேவலம்இ லாதஇட மும்பெற்று
வாழ்கின்ற வாழ்வருளுவாய்
அலைஇலாச் சிவஞான வாரியே ஆனந்த
அமுதமே குமுதமலர்வாய்
அணிகொள்பொற் கொடிபசுங் கொடிஇரு புறம்படர்ந்
தழகுபெற வருபொன்மலையே
தலைவர்புகழ் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.


ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவுகல வாமைவேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை
பேசா திருக்க்வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்
பிடியா திருக்கவேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
மறவா திருக்கவேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

ஞான சற்குரு  முருகன் வள்ளலாருக்கு  தெளிந்த  உணர்வை  கொடுத்தாராம் . என்ன  தெளிவு ?

வள்ளல்பிரான்  சைவமார்க்கத்தில் பிறந்து வளர்ந்தவர் . குடும்ப சூழலில் அந்த  சித்தாந்தம் அவருக்கு  தெரிந்திருக்கும் .

நல்ல குரு ஏற்கனவே  வளர்ந்ததை அழித்து விடு ; மார்க்கம் மாறிவிடு ; இனம் மாறி வேறொரு இனத்தினரின் பெயரை வைத்துக்கொள் ; உன் தாத்தன் பூட்டன் பெயரை மறந்து விட்டு யாரென்றே தெரியாத ஆப்ரகாம் ஈசாக்கு யாக்கோபு என யூதர்களின் பெயரை தாத்தன் பூட்டனாக சொல்லு என்றெல்லாம் சொல்லமாட்டார்

இருக்கிற இடத்திலிருந்தே கடவுளை நோக்கி பாதை காட்டி அருளுவார்

சைவமரபிலே பசு பதி பாசம் என்பதை சொல்லித்தந்திருப்பார்கள்

பசுவாகிய மனிதர்களை மனித ஆத்மாக்களை பாசம் என்னும் பிறவிக்கடலில் இருந்து  ரட்சித்து கடவுளை காட்டியருளும் குருவாக சிவனை பதியாக பற்றிக்கொள்

உலக பாசத்திலிருந்து சிவகுருவின் மீது பாசத்தை வளர்த்துக்கொண்டால் பாசம் என்னும் பந்தத்திலிருந்து விடுபடுவாய் என்பார்கள்

வள்ளல்பிரானிடம் சிவகுருவாக வந்த  முருகன் ; நிலைக்கண்ணாடியில் தன்னை காட்டியருளிய முருகன் பசு பதி பாசத்திலிருந்தே உபதேசத்தை தொடங்கினாராம்

பதிபூசை முதலநற் கிரியையால் மனம்எனும்
பசு சுத்த பாவனை ஆகும் கரணம் ஈங்கமாகும்  

பதியாகிய சிவபூஜை செய்வதால் மனம் என்னும் பசு சுத்தமாகும் . மனதோடு சேர்ந்து இயங்கும் மனதை கெடுக்கும் ஐம்புலன்கள் ஈங்கமாகும் .

ஞானிகள் பேசுகிற பாஷையால் தமிழ் விளங்கும் . தங்கம் வலிவு இல்லாதது . நகையாக அணியமுடியாது . நகை செய்யவேண்டுமானால் அதில் செம்பை அளவோடு கலக்கவேண்டும் . அப்படி கலந்த தங்கத்தை தங்கநகை ஆபரணம் என்கிறோம் . அது சாதாரண பயன்பாட்டுக்கு உரியது ஆனால் கோவிலில் பயன்படுத்தப்படும் திருமேனிகள் ஐம்பொன்னால் செய்யப்படும் . ஏனெனில் அவைகள் அருளை உள்வாங்கி வெளியிடவும் வேண்டும் அந்த ஐம்பொன் பயன்படுத்த பயன்படுத்த சுத்தம் செய்ய சுத்தம் செய்ய மெருகேறும் தீர்த்தவாரியின் போதும் திருமஞ்சனத்தின் போதும் மெருகேறும் இந்த ஐம்பொன்னை ஈங்கம் என்கிறார் வள்ளலார்

இந்த ஈங்கம் ஐம்புலனுக்கும் அடையாளமானது ஐம்புலன்கள் சுத்தமடைய சுத்தமடைய திருமேனியாக மகிமை அடைகிறது

அதாவது மனமது செம்மையாகும் போது சுத்த பாவனையும் உடலும் பொன்னைப்போல பிரகாசமடைகிறது . பொழிவடைகிறது திருமேனியாகிறது

ஆனால் ஆனால் பதியானவரோ அந்த சுத்த பாவனையையும் கடந்தவர் .

மனிதன் முதலில் சுத்த பாவனை அடையவேண்டும் . பிறகோ அந்த பாவனையையும் கடந்து விடவேண்டும்

தீமையிலிருந்து நன்மைக்கு மாறவேண்டும் பிறகோ நன்மை தீமை என்பதையும் கடந்துவிடவேண்டும் இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன் . நன்மையையும் கூட  ஒரு இருளே .

இறைதூதர்களோ அவதாரங்களோ தீய இயல்புள்ளவர்களை வெறுத்ததோ விலகி நின்றதோ இல்லை . அவர்களிலிருந்து தங்களை மேம்பட்டவர்களாக வித்தியாசப்படுத்தியும் காண்பித்ததில்லை

என்னை பாவிகளின் தோழன் என்கிறார்கள் ; மனம் திரும்ப அவசியமில்லாத 99 நீதிமான்களைக்காட்டிலும் மனம் திருந்துகிற ஒரே ஒரு பாவியின் நிமித்தம் பரலோகம் மிகுந்த சந்தோசமடையும் என்றார் சற்குரு இயேசு . தேவ அன்பை ருசி பார்த்தவர்கள் யாரும் தீயவர்களை அருவெறுக்க மாட்டார்கள்

இறைவன் நல்லோர்க்கும் பொல்லோர்க்கும் நடு நிற்பவர்

சுத்த பாவனை அறச்சுத்த பாவனையில் நிற்கும்மெய்ப்
பதி

சுத்தம் அந்த சுத்தத்தையும் கடந்த நிலை பரிகரித்த நிலை பரிசுத்தம்

நன்மை தீமை என உணர்ந்து நன்மையில் நின்றால் அது சுத்தம் நன்மை தீமையையும் கடந்து விட்டாலோ பரிசுத்தம்

மதி பாசம் அற்று அடங்கிய நிலை இருமைகளை கடந்த ஏகாந்த நிலை 

மதிபாசம் அற்றதின் அடங்கிடும் அடங்கவே
மலைவில்மெய்ஞ் ஞானமயமாய்
வரவுபோக் கற்றநிலை கூடும்என எனதுளே
வந்துணர்வு தந்தகுருவே

இருமையை கடந்த நிலை வரவு போக்கற்ற நிலை எதனாலும் பாதிப்பில்லாத நிலை கைகூடினால்  மெய்ஞானம் விளங்கும்

அது குன்றின் மீது ஒளிரும் விளக்கை போல தனக்கும் சமூகத்திற்கும் பலனளிக்க கூடியது

மத்தேயு 5

1. அவர் திரளான ஜனங்களைக் கண்டு மலையின் மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள்.

2.
அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்:

3.
ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.

4.
துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.

5.
சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.

6.
நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.

7.
இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

8.
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.

9.
சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.

10.
நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.

14. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.

15.
விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.
என்பது இயேசுவின் உபதேசமாகும்  

முருகன் வள்ளலாருக்கு சைவ சித்தாந்தம் முதல் இயேசுவின் உபதேசம் வரை காட்டுக்கொடுத்தார் என்பதே இங்கு சுட்டப்படுகிறது

பஞ்சமாபாதகம் என்று கேள்விப்பட்டிருப்போம் . ஆனால் வள்ளலோ ஏழு சப்தபாதகம் என்கிறார் . காமம் கோபம் லோபம் மோகம் மதம் மாச்சரியம் ; இவைகளுடன் கொலை ஆகிய ஏழு பாதகங்கள் மற்றும் இவைகளோடு கூடிய அநேக தீய இயல்புகள் எனைப்பற்றிடாமல் முருகன்  காத்துக்கொள்ளவேண்டுமாம் . ஏனெனில் தீயோரை தள்ளாது அவர்களையும் அன்பு செழுத்தி முன்னோக்கி இழுக்க வேண்டும் என்ற உபதேசத்தை கடைபிடிக்கும்போது அதில் நானே விழுந்துபோகாதபடி குருவருளும் திருவருளுமே காக்க முடியும்

சேமமிகு மாமறையின் ஓம்எனும் அருட்பதத்
திறன்அருளி மலயமுனிவன்
சிந்தனையின் வந்தனைஉ வந்தமெய்ஞ் ஞானசிவ
தேசிக சிகாரத்னமே

சேமத்தை அளிக்கும் மா மறைகள் பல உலகம் முழுதும் பகுதி பகுதியாக ஆங்காங்கு வெளியாக்கப்பட்டுள்ளன .வேற்றுமை போல தெரியும் அவை ஏமத்தை ஏக இறை நெறியை மறுக்கும் மதங்களாக நின்று மாச்சரியம் என்னும் வம்புகளை இழுத்துவிடுகின்றன . அவைகளின் ஊடாக  நின்று இலங்கும் அருட்பதமே ஓம் .

அந்தோ அந்த ஓம் ன் அர்த்தத்தை சிவன் முதலான அனைத்து மனிதர்களும் மறந்தல்லவோ போனார்கள் . மலை முனிவன் சிவனுக்கு முருகனல்லோ ஓம் என்ற பதத்தின் அர்த்தத்தை உபதேசித்தார்  

இன்றைய மனிதர்களும் ஓம் என்பதன் அர்த்தம் அறியாமல் ஏதோதோ பிதற்றுவார் . அல்லது சிவனுக்கு முருகன் உபதேசித்து விட்டார் என்பதை தெரிந்திருப்பதையே ஓம் க்கு அர்த்தம் அறிந்ததுபோல நம்பிக்கொள்வார் .

ஓம் என்ற பதத்தின் அர்த்தம் ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம் என்பதாம் ஓரிறைவனையே துதிக்கிறோம் என்பதாம்

வானமண்டலத்திலும் பால்வெளியிலும் அனைத்து தேவர்களும் படைப்புகளும் ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம் ஓரிறைவனையே துதிக்கிறோம் என்று மனதாலும் உணர்வாலும் துதிக்கும் சத்தமே பிரணவ மந்திரமாக சுற்றி சுழன்று வருகிறது

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி






Thursday, May 26, 2016

பிரச்சினைகள்




உலகம் ரஜோ குணத்தாலும் தமோ குணத்தாலுமே தன்னை வளப்படுத்திக்கொள்கிறது

நாமும் முந்தைய பிறவிகளில் இப்படித்தான் இருந்தோம்

ஆனால் உண்டான பட்டறிவாலும் இறைவனின் கிருபையாலும் சத்வகுணத்தை நாடியுள்ளொம்

இப்போது நாம் இவ்வுலகத்தார் அல்ல இங்கு நாம் அன்னியனும் பரதேசியுமாவோம்

அந்நிய தேசத்தில் வாழ்வோர் சகிப்புத்தன்மையோடுதான் வாழ்ந்தாக வேண்டும்

இந்த பூமி கலியுக முடிவு மட்டும் அசுரர்களின் ஆளுகைக்கு ஒப்புகொடுக்கப்பட்டுள்ளது

அசுரர்களுக்கு மனிதர்களின் சிந்தனை களில் இச்சைகளை தூண்டி ஆளுகை செய்ய அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது

ஆகவே உலகமும் அதன் அதிபதியும் இறைவனை நாடுவோரை பகைப்பார்கள்

உலக மாயைகளில் செல்லுவோரை கடவுள் செக் வைப்பதில்லை

அவர்கள் அக்கிரமம் மிகுந்து பாவம் பெருகியபிறகே இறைவன் விசாரிக்கிறார்

ஆனால் அசுரர்கள் அப்படியல்ல நாம் இறைவனை நாடினாலே செக் வைப்பார்கள்

நாம் வளர்ந்துகொண்டிருக்கிறோம் வளர்வதையே இறைவனும் விரும்புகிறார்

இந்த இடத்தில் குருவின் அரவணைப்பில் பாதுகாப்புண்டு
அது மனித குருமாரல்ல
சற்குருநாதர்களான நால்வர்

எந்த குருவும் இந்த நால்வரின் குருகுலத்தை சேர்ந்தவர்களே
ஆகவே இவர்களின் நாமத்தினால் இறைவனிடம் தொடர்பு கொண்டு பாருங்கள்
நாம மகிமையை பற்றி ராமர் காலத்திலேயே வந்துவிட்டது

விஸ்ணு சகஸ்ரநாமம் பீஸ்மாரால் அம்புபடுக்கையில் இருந்தவாறே உபதேசிக்கப்பட்டது
அதில் ஆயிரம் நாமங்களை உபதேசிக்கிறார்
அதன் முடிவில் சிவனும் வந்து சகல நாமங்களின் சிறப்பையும் பலனையும் ராமநாமம் ஒன்றே நல்கும் ஏன்கிறார்


ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே

சஹஸ்ர நாம தத் துல்யம் ராம நாம வரானனே

என்கிற சுலோகம் சிவன் வந்து சொன்னது


ராமன் என்றால் குமாரன் சற்குரு என்று அர்த்தம்
கடவுளுக்கு அடுத்த குமாரர்கள் இந்த நால்வரே

இந்த நால்வரும் பூமியில் பல அவதாரம் வந்திருக்கிறார்கள்
அவர்களை வேறுவேறு நபராக குழம்பவேண்டியதில்லை
ராமரும் கிரிஸ்ணரும் இயேசுவும் நாராயணனே

மீண்டும் உலகியல் பிரச்சினைகளைப்பற்றி வருவோம்

இயேசுவின் வார்த்தைகளை கவணியுங்கள்

நான் உலகத்தானல்ல நான் உலகத்தவனாக இல்லாதபடியால் உலகம் என்னை பகைக்கிறது
அதுபோல் நீங்களும் உலகத்தாரல்ல
ஆனாலும் என் சமாதானத்தையே உங்களுக்கு வைத்துபோகிறேன்
என் நாமத்தினால் கடவுளிடம் நீங்கள் கேட்பது எதுவோ அது நிச்சயமாக அருளப்படும்
நீங்கள் என்னிலும் நான் உங்களிலும் நிலைத்திருந்தால் நானும் கடவுளும் ஒருவரிலொருவர் நிலைத்திருப்பதுபோல கடவுளும் உங்களில் நிலைத்திருப்பார்

கடவுளும் நாமும் ஒருவரிலொருவர் நிலைத்திருக்கவில்லை
ஆனால் அதிதேவர்கள் கடவுளில் நிலைய்துள்ளனர் கடவுளும் அவர்களில் நிலைத்துள்ளார்

ஆகவே நாமம் என்ற கோட்டைக்குள் பிரவேசிக்க வேண்டும்

பிரார்த்தனை நாமத்தின் மூலமாக மட்டுமே கடவுளிடம் ஏறெடுக்கப்பட வேண்டும்

குரு நம் குறைகளை பொறுப்பவர்
குரு அசுர ஆவிகளின் கட்டுகளை தகர்ப்வர்

இவ்வாறு தெடர்ந்து தினமும் தியானமோ பிரார்த்தனையோ செய்தால் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் மங்காத சமாதானம் அமைதி நிலைத்தமனது சாந்தம் நம்முள்ளே ஊற்றெடுக்கும்

என் சமாதானத்தையே உங்களுக்கு வைத்துப்போகிறேன்
அந்த சமாதானம் நமக்கு வாக்களிக்கப்பட்டது
குருவின் பேரருளால் நமக்குள் ஊறுவது
தியானம் அல்லது பிரார்த்தனை குறைவால் இழந்துபோகிறோம்


பிரச்சினைகள் வராமல் இருப்பதல்ல சமாதானம்

ஏவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் உணர்வுவயப்படாமல் அதிர்வடையாமல் சாந்தியில் நிலைத்திருப்பது
சாந்தமுடன் இறைவனிடம் ஒப்படைத்து பிரார்த்தித்து கொண்டு இருக்கிறவரையில் நாம் வெற்றி பெறுகிறோம்

சாந்தமிலந்த போது தோற்று விடுகிறோம்

பிரச்சினைகள் கண்டு எதற்காக நோகிறோம்

நான்கு அதிதேவர்கள் நாமத்தினால் கடவுளே இப்பிரச்சினையில் சாந்தி உண்டாக்குவீராக என வேண்டிக்கொண்டே இருந்தால் தானவே வழிதிறக்கும்

பிரச்சினைகளின் தீர்வு வெளியில் இல்லை
நாம் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டே சாந்தியாக இருப்பதில் உள்ளது


நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி 







Sunday, May 22, 2016

கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 1




இந்தப்பிளேயரிலும் கேட்கலாம்
https://ia802704.us.archive.org/23/items/KandakottamDeivamanimaalaiPartI/Kandakottam%20Deivamanimaalai%20Part%20I.ogg

திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி அன்பருள் 

திறலோங்கு செல்வம்ஓங்கச்
செறிவோங்க அறிவோங்கி நிறைவான இன்பம்
திகழ்ந்தோங்க அருள்கொடுத்து
மருஓங்கு செங்கமல மலர்ஓங்கு வணம்ஓங்க
வளர்கருணை மயம்ஓங்கிஓர்
வரம்ஓங்கு தெள்அமுத வயம்ஓங்கி ஆனந்த
வடிவாகி ஓங்கிஞான
உருஓங்கும் உணர்வின்நிறை ஒளிஓங்கி ஓங்கும்மயில்
ஊர்ந்தோங்கி எவ்வுயிர்க்கும்
உறவோங்கும் நின்பதம்என் உளம்ஓங்கி வளம்ஓங்க
உய்கின்ற நாள்எந்தநாள்
தருஓங்கு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

பரம்ஏது வினைசெயும் பயன்ஏது பதிஏது
பசுஏது பாசம்ஏது
பத்திஏ தடைகின்ற முத்திர தருள்ஏது
பாவபுண் யங்கள்ஏது
வரம்ஏது தவம்ஏது விரதம்ஏ தொன்றும்இலை
மனம்விரும் புணவுண்டுநல்
வத்திரம் அணிந்துமட மாதர்தமை நாடிநறு
மலர்சூடி விளையாடிமேல்
கரமேவ விட்டுமுலை தொட்டுவாழ்ந் தவரொடு
கலந்துமகிழ் கின்றசுகமே
கண்கண்ட சுகம்இதே கைகண்ட பலன்எனும்
கயவரைக் கூடாதருள்
தரமேவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

துடிஎன்னும் இடைஅனம் பிடிஎன்னும் நடைமுகில்
துணைஎனும் பிணையல்அளகம்
சூதென்னும் முலைசெழுந் தாதென்னும் அலைபுனல்
சுழிஎன்ன மொழிசெய்உந்தி
வடிஎன்னும் விழிநிறையும் மதிஎன்னும் வதனம்என
மங்கையர்தம் அங்கம்உற்றே
மனம்என்னும் ஒருபாவி மயல்என்னும் அதுமேவி
மாழ்கநான் வாழ்கஇந்தப்
படிஎன்னும் ஆசையைக் கடிஎன்ன என்சொல்இப்
படிஎன்ன அறியாதுநின்
படிஎன்ன என்மொழிப் படிஇன்ன வித்தைநீ
படிஎன்னும் என்செய்குவேன்
தடிதுன்னும் மதில்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே. 


வள்ளல்உனை உள்ளபடி வாழ்த்துகின் றோர்தமை
மதித்திடுவ தன்றிமற்றை
வானவரை மதிஎன்னில் நான்அவரை ஒருகனவின்
மாட்டினும் மறந்தும்மதியேன்
கள்ளம்அறும் உள்ளம்உறும் நின்பதம்அ லால்வேறு
கடவுளர் பதத்தைஅவர்என்
கண்எதிர் அடுத்தைய நண்என அளிப்பினும்
கடுஎன வெறுத்துநிற்பேன்
எள்ளளவும் இம்மொழியி லேசுமொழி அன்றுண்மை
என்னை ஆண் டருள்புரிகுவாய்
என்தந்தை யேஎனது தாயேஎன் இன்பமே
என்றன்அறி வேஎன்அன்பே
தள்ளரிய சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.


    வள்ளல் பெருமான் உலகம் உய்ய அடித்தளம் அமைக்க பரலோகத்தில் இருந்து அனுப்பப்பட்டவர் . முற்பிறவியிலேயே எலிஜா என்ற யூதராக மவுன்ட் கர்மேல் பர்வதத்தில் தபோவனம் அமைத்து ஆன்மீக சாதனை செய்தவர் . அப்பிறவியிலேயே அவர் முதன்முதலாக ஒளி சரீரம் அடைந்து ஏஞ்சல் சாண்டல்பான் என்ற தேவராக பரலோகம் ஏகி சப்த ரிஷி மண்டலத்தின் கால் பகுதியில் இடம் பெற்றவர்

    இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இருந்து சமரச வேதம் வெளியரங்கமாகவும் அடித்தளம் அமைக்கவும் ; சைவ மரபில் வளர்ந்த அடியவர்கள் பலர் அதிதேவர் சிவனை மட்டும் வழிபடுகிறவர்கள் என்ற நிலையிலிருந்து அருவ ஏக இறைவனை அருட்பெருஞ்சோதி என்ற அடைமொழியால் வழிபடுகிறவர்களாக தரம் உயர்த்தவும் இறைவனால் பூமிக்கு அனுப்பபட்டார் .

    கந்தர் கோட்டத்தில் ஒன்பது வயது சிறுவனாக அவர் பாடிய முதல் பாடலிலேயே அவர் சமுதாய சிந்தனையை வெளிப்படுத்துகிறார்

    அன்பர்கள் நிறைவான இன்பம் அடையவேண்டுமானால் என்னென்ன வேண்டுமாம் ? ஆன்மீக செறிவும் அறிவும் ஞானமும் தரம் உயர்ந்தால் மட்டுமே இறைவனால் போஷிக்கப்படும் செல்வம் ஆசிர்வாதமாக நிறையும் திரு ஓங்கும் செல்வம் என்பது இறைவனை சரணடைய சரணடைய புன்னியங்களாக பூமியில் நிறையும் அது இறைவனின் பேரருளால் வரப்போகும் சத்திய யுகத்தில் சாத்தியமாகும்

    மனிதர்களுக்கு மட்டுமல்ல இயற்கைக்கும் பூமிக்கும் இந்த ஆசிர்வாதம் அருளப்படும்
    ஏசாயா 43 :
    19. இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.

    20. நான் தெரிந்துகொண்ட என் ஜனத்தின் தாகத்துக்கு வனாந்தரத்திலே தண்ணீர்களையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவதினால், காட்டுமிருகங்களும், வலுசர்ப்பங்களும், கோட்டான் குஞ்சுகளும் என்னைக் கனம்பண்ணும்.

    21. இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியை சொல்லிவருவார்கள்.

    23. வானங்களே, களித்துப் பாடுங்கள்; கர்த்தர் இதைச் செய்தார்; பூதலத்தின் தாழ்விடங்களே, ஆர்ப்பரியுங்கள்; பர்வதங்களே, காடுகளே, காட்டிலுள்ள சகல மரங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்

    வள்ளல்பிரானும் செங்கமல மலர் ஓங்கும் வனம் ஒங்க அருள்கிடைக்கும் என்கிறார் , தாமரை தடாகம் என்பது குளிர்ந்த நீரோடும் தாமரையின் தண்டுகளும் வேர்களும் பின்னிப்பிணைத்து அமைதியாக தண்ணென்று இருக்கும் . அதில் அவ்வளவு எளிதாக யாரும் இறங்கி விடமுடியாது கால்கள் பின்னி மலரை பறிக்க விடாமல் தடுத்து கொன்று விடும் ஆகவேதான் மரு ஓங்கும் செங்கமலம் என்கிறார் பகையை வெல்லும் அருள் பாதுகாப்பு அது . வளர்கருணை மற்றும் அமுதம் ஆனந்தம் ஞானம் உள்விளைந்த ஒளி வடிவமானவன் முருகன் அவனே வரப்போகிற கல்கி ; சத்திய யுகத்தை நிறுவப்போகிறவன் அவனால் பறவுகிற மகிழ்ச்சியால் எல்லா உயிரினங்களும் நல்லிணக்கமாக மாறிவிடுமாம் .



    சத்திய யுகத்தை பற்றிய பல முன்னறிவிப்புகள் எல்லா மதங்களிலும் வந்துள்ளன .

    ஏசாயா 11 :

    1. ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.

    2. ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.

    3. கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும்,

    4. நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.

    5. நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும்.

    6. அப்பொழுது ஓநாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்.

    7. பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப்படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்.

    8. பால் குடிக்குங்குழந்தை விரியன்பாம்பு வளையின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும்,

    9. என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரைஅறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.


    வரப்போகிற ஆண்டவரான முருகனின் பாதம் என் உள்ளம் ஓங்குகிற நாள் எந்த நாள் ?

    ஆனால் அஞ்ஞானிகள் நாத்தீகர்கள் கடவுள் இல்லை பாவபுண்ணியங்கள் இல்லை பகுத்தறிவால் பூமியில் சம்பாதித்து அதன் இன்பங்களை விஞ்ஞான முறைப்படி பழுதில்லாமல் அனுபவிப்பதே புத்திசாலித்தனம் என்கிறார்கள் அத்தகைய கயவர்களை நான் கூடி அவர்களைப்போல மாறாத படி அருள்செய்வாயாக

    பெண்கள் உடலின் இயல்பு வனப்புள்ளது . ஆனால் ஆதியில் படைக்கப்படும் போது பெண்மை அன்பிற்கும் ஆதரவிற்கும் மதிப்பிற்கும் உரித்தானதாகவே இருந்தது காமம் என்பது அப்போது இல்லை . மதிப்பிற்குரிய நேயத்தை கீழான காமம் கொச்சைப்படுத்தி விட்டது

    அந்த மயக்கத்தை கொடுக்கும் மனம் என்னும் பாவி மாளட்டும் நான் நித்திய ஜீவனோடு வாழ உன் உபதேசம் என்னை ஆட்கொள்ளட்டும்

    உலகில் வழங்கும் ஆறு மார்க்கங்களான வேதங்களை ஆறு முகம் ஒரு முகமாக்கும் ஞான சற்குருநாதா ; சலத்தையும் சமரசப்படுத்தும் சாந்த சொருபியே ; கந்தர்கோட்டத்தில் வளரும் ஞான மணியே

    ஞான சற்குருநாதா உன்னையன்றி எனக்கு வேறு போக்கிடம் இல்லை . வேறு சாதாரண தேவர்கள் என் முன் தோன்றி சில சித்துக்களை கொடுப்பதாக இருந்தாலும் நான் அவற்றை  நாடேன் . மேமையான சமரச சுத்த சன்மார்க்கத்தை எனக்கு அருள்வாயாக 

    நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
    ஓம் நமோ நாராயணனாய

    ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
    ஓம் நமோ ஆதிசேஷாய

    நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
    ஓம் நமோ நாராயணியாய

    சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
    ஓம் நமோ சிவாய

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி








    Sunday, May 15, 2016

    வள்ளலாரின் பேருபதேசம்




    இந்தப்பிளேயரிலும் கேட்கலாம்
    https://ia801507.us.archive.org/18/items/Amala_201606VALLALAARLASTSERMON/02.பேருபதேசம்%20-%20easymp3.xyz.ogg


    (ஸ்ரீ முக வருஷம்,ஐப்பசி மாதம்,7ஆம் நாள்,புதவாரம், பகல் 8 மணிக்கு,மேட்டுக்குப்பம்
    என்னும் சித்திவளாகத் திருமாளிகையில் முதன் முதலில் கொடி கட்டினவுடனே
    நடந்த நிகழ்ச்சியின் குறிப்பு.)


    இங்குள்ள நீங்கள் எல்லாரும் இதுவரைக்கும் இருந்தது
    போல் இனியும் வீண்காலம் கழித்துக் கொண்டிராதீர்கள்,இது முதல் சாலைக்கு
    ஆண்டவர் போகின்ற பத்துத் தினமாகிய கொஞ்சக் காலம் வரையில் நீங்கள்
    எல்லாரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள் அந்த விசாரணை
    எது வென்றால், நம்முடைய நிலை எப்படிப்பட்டது ? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிகின்ற
    தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது ? என்று விசாரிக்கவேண்டியது. அதற்குத்தக்கபடி,
    நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும்
    ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது வேலாயுத முதலியாரைக் கேட்டால் மனுஷ்யதரத்தில்
    போதுமான வரையில் சொல்லுவார்-அவரிடம் அப்படிக் கேட்டாவது நல்ல விசாரணையிலிருங்கள்.


    அல்லது, தனியாகவும் விசாரிக்கலாம். இவ்விசாரைணை முகத்திலிருந்தால்,
    நமது ஆன்மஅறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத் திரைகளில்
    அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கி விடும்.
    அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிகவிரைவில் நீங்கிப்போய்விடும்.


    அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான
    பசுமை இருக்கின்றது. இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென
    ஸ்தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும்
    இவ்வண்ணமாக, இருக்கின்றபோதும் படுக்கின்றபோதும் இடைவிடாது
    இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டு மென்கின்ற
    முயற்சியுடனிருந்தால் தெரிய வேண்டியதைத் தெரிந்து கொள்ளலாம்.


    அவ்விசாரம் பரம், அபரம் என்ற இரண்டு வகையாயிருக்கின்றது. இவற்றில்
    பரம் பரலோக விசாரம், அபரம் இகலோக விசாரம். இவ்விரண்டில் இகலோக
    விசாரம் விசார மல்ல. சாதாரணமாக ஒருவன் வி-சாரம் செய்து
    கொண்டிருக்கின்றானே யென்றால்,அவ்விசாரம் விசாரமாகாது, உண்மை
    விசாரமுமல்ல. ஏனெனில், விசார மென்கின்றதுற்குப் பொருள், வி-சாரம் என்பதில்
    வி-சாதாரண உலக _விசாரத்தை மறுக்க வந்தது, அது மேலும் பரலோக
    விசாரத்தையே குறிக்கும் பொருட்டு வந்தது. 

    ஜலத்திலிருக்கின்ற பாசியை நீக்குவது
    போல், நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடியிருக்கின்ற பச்சைத் திரையாகிய
    ராகாதிகளை விசார அதியுஷ்ணத்தாலல்லது, மற்ற உஷ்ணங்களால் நீக்கமுடியாது.


    அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவதில் தெரியும். அதை மனுஷ்ய தரத்தில்
    உண்டு பண்ணுவதற்குத் தெரியாது. அந்த விசாரத்தைவிட ஆண்டவரை ஸ்தோத்திரம்
    செய்கின்றதிலும் தெய்வத்தை நினைகின்றதிலும் அதிக உஷ்ணம் உண்டாகும்.


    யோகிகள் வனம், மலை, முழை முதலியவற்றிற்குப் போய்,நூறு, ஆயிரம் முதலிய
    வருஷகாலம் தவஞ் செய்து, இவ்உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறார்கள்.


    இப்படித் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும்,
    தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும், இதை விடக் கோடிப்
    பங்கு, பத்துகோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம்.


    எவ்வாறெனில், ஒரு ஜாம நேரம், மனத்தில் இக விசார மின்றிப் பர விசாரிப்புடன்
    ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது ஸ்தோத்திரம்
    செய்து கொண்டாவதிருந்தால், நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம்.


    ஆதலால், இவ்வுலகத்தில் வி-சார மென்கின்ற உண்மை தெரியாது, விசாரமென்று
    வழங்கி, அதைத் துக்கமென்றே சொல்லுவார்கள். நாம் அப்படி அர்த்தம் பண்ணக்கூடாது.
    அவர்கள் பண்ணுகின்றது-துக்கமே விசார மென்கின்றது. அது தப்பு,


    அவ்வர்த்தமுமன்று. சார மென்கின்றது துக்கம்.வி-சார மென்கின்றது துக்க
    நிவர்த்தி. வி-உபசர்க்கம். சாரமென்கின்ற துக்கத்தை நிவர்த்தித்து ஆதலால்,
    விசார மென்கின்றது முன் சொன்னபடி பரலோக விசாரத்தையே குறிக்கின்றது.


    ஆதலால் இடைவிடாது நாம் விசார வசத்தராயிருக்க வேண்டியது. மேலும் வி-சார
    மென்பது:- வி-விபத்து; சாரம் நீக்குதல், நடத்தல். ஆதலால்
    இடைவிடாது நன்முயற்சியின்கண் பயிலுதல் வேண்டும்.


    மேலும், சிலர் ‘இது ஆண்டவர் வருகின்ற தருணமாக இருக்கின்றதே!
    இத்தருணத்தில் முயற்சி செய்வானேன் ? ஆண்டவர் வந்தவுடனே பெற வேண்டியதை
    நாம் பெற்றுக்கொள்ளப்படாதோ ? ‘ என்று வினவலாம். ஆம், இஃது தாம் வினவியது
    நலந்தான். ஆண்டவர் வரப்போகின்றதும் சத்தியந்தான். நம்மவர்களின் திரை
    நீங்கப் போகின்றதும் சத்தியந்தான். நீங்களெல்லவரும் பெற வேண்டியதைப்
    பெற்றக்கொள்ளுகின்றதும் சத்தியந்தான். 


    ஆனால், முன் சொன்ன ரகசம்பந்தமான
    பச்சைத்திரை இரண்டு கூறாக இருக்கின்றது. யாவெனில்:- அசுத்தமாயாதிரை,
    சுத்தமாயாதிரை யென்னும் இரண்டுமாம். இவை கீழ்பாகத்திலொரு கூறும்
    மேற்பாகத்திலொரு கூறுமாக இருக்கும். இவை கீழ்ப்பாகத்திலுள்ளது
    அசுத்தமாயதிரை. மேற்பாகத்தில் சுத்தமாயாதிரை இருக்கும். இவற்றில்
    அசுத்தமாயாதிரை இகலோக போக லட்சிய முடையது. சுத்தமாயாதிரை பரலோக
    சாத்தியத்தையுடையது. இவற்றில் ஆண்டவர் வந்து அனுக்கிரகஞ் செய்கின்ற போது,
    முயற்சியில்லாத சாதாரண மனுஷ்யர்களுடைய கீழ்ப்பாகத்திலிருக்கின்ற அசுத்தமாயை
    யென்னும் பச்சைத்திரையை மாத்திரம் நீக்குவார். ஆதலால், அக்காலத்தில்
    நாம் அத்திரை நீங்கியவுடன் கூடிய வரையில் சுத்தமாய்ப் புனிதர்களாக
    இருக்கலாமேயல்லது, பெற வேண்டியதைப் பெற்றுகொள்ளுகிறதற்குக் கூடாது.
    மேலும், பஞ்சகிருத்திய விபவங்களும் இதர சித்தி முதலியவயவையும்
    ஆன்மானுபவத்தையும் செய்யவும் பெறவும் கூடாது. பின்னும் நன்முயற்சி செய்தே
    மேலேற வேண்டும்.


    மேலும், இத்தருணம் இங்கு உண்டாகும் கூச்சல் முதலியவையும்
    அடுத்தவர்களுக்குப் பக்குவம் வருவிக்கவும் பாவிகளை விலக்கவும் உண்டாயின.
    ஆதலால் நாம் எல்லாரும் இத்தருணம் இப்போதே விசேஷ நன்முயற்சியுடனே
    இருந்தால், ஆண்டவர் வருகின்றபோது, நம் கீழ்ப் பாகத்திலுள்ள
    அசுத்தமாயாதிரையோடு கூடி மேற்பாகத்திலிருக்கின்ற சுத்தமாயையினுடைய பச்சைத்
    திரையும் நீங்கிப்போய்விடும். கருமையிற் பச்சை வண்ண முடையது அசுத்தமாயாதிரை.
    பொன்மையிற் பச்சை வண்ண முடைய சுத்தமாயாதிரை. நீங்கினபிறகு, மற்ற எட்டுத்
    திரைகளும் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். (இத்திரைகளின் விவரத்தைத்
    திருவருட்பெருஞ்ஜோதி அகவலில் கண்டுணர்க. )


    மேலும்,இது நீங்கினவுடனே ஒருவன்
    பஞ்சகிருத்திய முதலானவையுஞ் செய்வான். ஆதலால், ஒவ்வொருவரும் முயற்சியுடனே இருந்தால், அதற்குத் தக்க லாபத்தைப்
    பெற்றுக்கொள்ளலாம்.
    இதற்கு மேற்பட, நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லட்சியம்
    வைத்துக்கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள்
    எதனிலும் லட்சியம் வைக்கவேண்டாம். ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது
    குழுஉக்குறி யன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை
    இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல், மண்ணைப் போட்டு
    மறைத்து விட்டார்கள். அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லட்சணத்தை
    அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில், கைலாசபதி என்றும் வைகுண்டபதி
    என்றும் சத்தியலோகாதிபதி யென்றும் பெயரிட்டு, இடம், வாகனம், ஆயுதம், வடிவம்,
    ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக
    இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள். 


    ‘தெய்வத்தக்குக் கை, கால் முதலியன
    இருக்குமா ? ‘ என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள்.
    இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று
    பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை
    மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள்.

    ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஒர்
    வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை.
    அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்க வில்லை. 
    இதுவரைக்கும்
    அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை.
    அவைகளில்
    ஏகதேச கர்மசித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லியிருக்கின்றார்கள்.அதற்காக
    ஒவ்வொரு சித்திக்கும் பத்து வருஷம் எட்டு வருஷம் பிரயாசை எடுத்துக்கொண்டால்,
    அற்ப சித்திகளை அடையலாம். அதற்காக அவற்றில் லட்சியம் வைத்தால்,
    ஆண்டவரிடத்தில் வைத்துக் கொண்டிருக்கின்ற லட்சியம் போய்விடும்.


    ஆண்டவரிடத்தில் வைத்த லட்சியம் போய் விட்டால் நீங்கள் அடையப்போகின்ற பெரிய
    பிரயோஜனம் போய்விடும். அல்லது, அதில் முயற்சிசெய்து, அவ்வளவு காலம் உழைத்து,
    அந்த அற்பப்பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டு, அதனால் ஒரு லாபத்தை ஏகதேசம்
    அடைந்தால், முக்கிய லாபம் போய்விடும். 


    ஆகையால், அவைகளில் லட்சியம்
    வைக்காமல், ஆண்டவரிடத்திலேயே லட்சியம் வைக்க வேண்டியது. முன் சொன்ன
    ஏகதேச சித்தி கற்பனையென்கின்றது வாசகப் பெருவிண்ணப்பத்தாலும்
    இயல் வேதாகமங்கள் புராணங்கள் என்ற அருள் விளக்கமாலைப்
    பாசுரத்தாலுமுணர்க. *


    *இயல்வே தாகமங்கள் புராணங்கள் இதி காசம்
    இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்
    மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம் என அறிந்தார்
    மகனே நீ நூலனைத்தும் சாலம் என அறிக
    செயல் அனைத்தும் அருளொளியால் காண்கஎன எனக்கே
    திருவுளம்பற்றிய ஞான தேசிகமா மணியே திரு அருட்பா 4176


    மேலும் அதிற்கண்ட குறிப்பையுந் தெரிந்து கொள்ளுங்கள்.


    இது போல் வியாகரணம், தொல்காப்பியம், பாணிநீயம் முதலியவைகளில்
    சொல்லிருக்கின்ற இலக்கணங்கள் குற்றமே. எவ்வாறெனில் தொண்ணூறு
    தொள்ளாயிரம் என்கின்ற கணிதத்தின் உண்மையை நான் சொன்ன பிறகு தெரிந்து
    கொண்டிர்களல்லவா ? இப்படியே ஒன்று, இரண்டு முதல் நூறு முதலான
    இலக்கங்களுக்கும் உகர இறுதி வருவானேன் ? ஒருவாறு சித்தர்கள் காரணப் பெயராக
    இட்டிருக்கிறார்கள். தொல்:- நூறு தொண்ணூறென்றும்,தொல்:- ஆயிரம்
    தொள்ளாயிரமென்றும் வழங்குகின்றன. தொல் என்பது ஒன்று குறையத் தொக்கது.
    தொன்மை தொல்லெனப் பிரிந்தது. வழக்கத்தில் தொள்ளாயிரம் தொண்ணூறு
    என மருவியது. இதற்குப் பத்திடத்திற்கு ஒரிடம் குறைந்த முன் ஆயிரமென்றும்,
    ஒன்று குறைந்த பத்தென்றும் ஒருவாறு கொள்க. இப்படி நான் சொன்னது போல்
    சொன்னால் சிறு குழந்தைகள் கூட அறிந்து கொள்ளும்.


    இதுபோல், சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம்,
    சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம். அவற்றில்
    தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கின்றதே அன்றிப் புறங்கவியச்
    சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்கு காலமில்லை. ஆதலால்
    அவற்றில் லட்சியம் வைக்கவேண்டாம். ஏனெனில், அவைகளிலும்- அவ்வச்சமய
    மதங்களிலும் அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமே யல்லாது, ஒப்பற்ற
    பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக்
    கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும்,
    இவைகளுக்கெல்லாம் சாட்சி நானேயிருக்கின்ளறேன். நான் முதலில் சைவ
    சமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவுவென்று அளவு
    சொல்லமுடியாது. அது பட்டணத்துச் சவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும்
    இன்னும் சிலருக்கும் தெரியும்.
    அந்த லட்சியம் இப்போது எப்படிப் போய்விட்டது.
    பார்த்தீர்களா! அப்படி லட்சியம் வைத்தற்குச் சாட்சிவேறே வேண்டியதில்லை.


    நான் சொல்லி யிருக்கிற-திருவருட்பாவில் அடங்கியிருக்கிற ஸ்தோத்திரங்களே
    போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும்
    சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாட்சி சொல்லிவிடும்.


    ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதுதிருந்த தென்றால்,
    அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.


    இப்போது ஆண்டவர் என்னை ஏறாதநிலைமேல் ஏற்றியிருக்கின்றார்.
    எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது.
    ஆதலால் நீங்களும் விட்டு விட்டிர்களானால், என்னைப் போல்
    பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக்
    கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா ?
    பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த
    லட்சியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லட்சியம்
    தூக்கி விடவில்லை. என்னை இந்த இடத்தக்குத் து‘க்கிவிட்டது யாதெனில்;
    அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று
    வாசகப் பெரு விண்ணப்பத்தினும், ‘எத்தேவரையும் நின் சாயையாய்ப்
    பார்த்ததேயன்றித் தலைவவே றெண்ணியதுண்டோ* ‘


    *மாயையாற் கலங்கி வருந்திய போதும்
    வள்ளல் உன் தன்னையே மதித்துன்
    சாயையாப் பிறரைப் பார்த்ததே அல்லால்
    தலைவ வேறெண்ணிய துண்டோ
    தூயபொற் பாதம் அறியநான் அறியேன்
    துயர் இனிச் சிறிதும்இங் காற்றேன்
    நாயகா எனது மயக்கெலாம்தவிர்த்தே
    நன்றருள் புரிவதுன் கடனே, -திருவருட்பா 3635.


    என, ‘தேடியதுண்டு நினதுருவுண்மை ‘ என்னும் தொடக்கமுடைய
    பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கின்றேன். மேலும் அவர் தெரிவித்த உண்மைப்
    பெருநெறி ஒழுக்கம் யாதெனில். ‘கருணையும்
    சிவமே பொருளெனக் கானும் காட்சியும் பெறுக ‘ **


    ** கருணையும் சிவமே பொருள்எனக் காணும்
    காட்சியும் பெறுகமற் றெல்லாம்
    மருள் நெறி எனநீ எனக்கறி வித்த
    வண்ணமே பெற்றிருக் கின்றேன்
    இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம்
    எய்திய தென்செய்வேன் எந்தாய்
    தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும்
    சிறுநெறி பிடித்த தொன்றிலையே. –திருவருட்பா 3503
    என்றது தான்.


    என்னை யேறாநிலைமிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு.
    தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.


    அந்தத் தயவுக்கு ஒருமை வரவேண்டும். அந்த ஒருமை இருந்தால் தான் தயவு வரும்.
    தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம். இப்போது என்னுடைய அறிவு
    அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது.அது அந்த ஒருமையினாலேதான்
    வந்தது. நீங்களும் என்னைப்போல் ஒருமையுட னிருங்கள். என்னிடத்தில் ஒருவன்
    வசப்படாத முரட்டுத்தனமாய் எப்படி யிருந்தாலும், அவனுக்கு நல்ல வார்த்தை
    சொல்லுவேன்; மிரட்டிச் சொல்லுவேன்;தெண்டன் விழுந்து சொல்லுவேன்;
    பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன்; அல்லது ஆண்டவரை நினைத்துப்
    பிரார்த்தனை செய்வேன்.இப்படி எந்த விதத்திலேயாவது நல்வழிக்கு வரச் செய்து
    விடுவேன்.


    நீங்கள் எல்லவரும் இப்படியே செய்தல் வேண்டும் இராத்திரிகூட ‘நான் இல்லாமல்
    இந்த ஜனங்கள் க்ஷணநேரம் இருக்க மாட்டர்களே என்று,என்று… ‘ ஆண்டவரிடத்தில்
    விண்ணப்பித்துக் கொண்டேன். அது இங்கே இருக்கிற ஜனங்கள் மட்டில் மாத்திரம்
    மல்ல. உலகத்திலிருக்கின்ற எல்லா ஜனங்களையும் குறித்தே விண்ணப்பித்துக்
    கொண்டேன். ஏன் அப்படி ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன் என்றால்
    எல்லவரும் சகோதரர்களாதலாலும், இயற்கை யுண்மை யேகதேசங்களாதலாலும்
    நான் அங்ஙனம் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை வைத்துக் கொண்டிருக்கிறேன்,


    இப்போது நீங்கள் இதுவரைக்கும் ஒழுக்கத்துக்கு வராமல் எவ்வளவு
    தாழ்ந்த மனுஷ்யர்களா யிருந்தாலும்-சாலைக்குப் போகக் கொஞ்ச தின
    மிருக்கின்றது-அதற்குள்ளாக நீங்கள் நீங்களும் நல்லொழுக்கத்திற்கு
    வருவதோடுகூட,மற்றவர்களையும் நமது ஒழுக்கத்திற்கு வரும்படி எவ்வித தந்திரமாவது
    செய்து நம்மவர்களாக்கிக் கொள்ள வேண்டியது. நீங்கள் கொஞ்ச தினத்திற்கு
    அப்படி செய்து கோண்டிருங்கள். நானும் ஆண்டவரிடத்தில் இவ்வுலகத்தில் உள்ள
    எல்லா ஜ“வர்களும் நன்மையடையப் பிரார்தித்தும், ஆண்டவரிடத்தில் கேட்டுக்
    கொண்டும் வருகின்றேன். ஆதலால் நீங்கள் அப்படிச் செய்துகொண்டிருங்கள்.


    சமயந் தவிர மதங்களில் உள்ள வேதாந்தி, சித்தாந்தி, யென்று
    பெயரிட்டுக் கொண்ட பெரியவர்களும் உண்மை அறியாது, சமயவாதிகளைப் போலவே
    ஒன்று கிடக்க ஒன்றை உளறுகிறாரக்ள். ஆதலால் நீங்கள் அஃது ஒன்றையும்
    நம்பவேண்டாம் எவைகளிலும் தெய்வத்தைப் புறமுகமாகப் புலப்படச் சொல்லவில்லை
    ‘தெய்வத்தை தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்மெனச்
    சுற்றுகின்றார்கள், ஐயோ! நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து
    கொள்ளாததினாலேயல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள்! ‘என்று நான் உள்ளும் புறமும்
    பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன், ‘ இருக்கின்றேன், இருப்பேன். தெய்வத்தை
    ஏன் தெரிந்துகொள்ள வில்லை யென்றால்: ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது
    அந்தப் பதார்த்ததினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை
    போகாது. அதுபோல்,தெய்வத்தை உள்ளபடி அனுபவித்தாலல்லது, தெய்வத்தினிடத்தில்
    பிரியம் வராது. ஆதலால், தெய்வத்தைத் தெரிந்து கொள்ளவேண்டு மென்கிற முக்கிய
    லட்சியத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்துகொண்டிருங்கள்.


    அந்த விசாரம் செய்வது எப்படியென்றால் அண்டத்தில் சூரியன் சந்திரன் நட்சித்திரங்கள்-
    இவைகள் எப்படிப்பட்டன ? இவைகளினுடைய சொரூபசுபாவம் என்ன ?
    இவை முதலான அண்ட விசாரமும், பிண்டத்தில் நாம் யார் ? இத்தேகத்தின்கண்
    புருவம் கைம்மூலம் இவைகளிலும் இவை போன்ற மற்ற இடங்களிலும் உரோமம் உண்டாவானேன் ?
    நெற்றி முதலான இடங்களில் அது தோன்றாதிருப்ப தென்ன ?
    கால் கைகளிலுள்ள விரல்களில் நகம் முளைத்தலும் அந்நகம் வளர்தலும்-இவை போன்ற மற்றத்
    தத்துபங்களினது சொரூப, ரூபசுபாவங்களும் என்ன வென்றும் பிண்ட விசாரமுஞ் செய்துகொண்டிருங்கள்.


    இப்படி இடைவிடாது விசாரஞ் செய்துகொண்டிருந்தால், இவ்வுலகத்தின்கணுள்ள ஜனங்கள் அதைக்
    குறித்துக் ஏளனமாகச்சொல்லுவார்கள். அப்படிச் சொல்வது அவர்களுக்குச் சுபாவம். ஏனெனில்,
    அவர்களுக்கு உண்மைதெரியாது. ஆதலால் நீங்கள் அதை லட்சியம் செய்யக்கூடாது.


    இப்படியே ‘காதில் இரண்டு பெரிய பொத்தல் செய்து வர விடுத்தவர் ஆணுக்குக் கடுக்கனிடுதலும்
    பெண்ணுக்கு மூக்குத்தி முதலியவை போடுதலும் தமக்கு சம்மதமானால் காதிலும் மூக்கிலும்
    அதற்கு வேண்டிய பொத்தல்களிட்டு வரவிட்டிருக்க மாட்டாரா ‘ என்று விசாரித்துத் தெரிந்து கொள்ளுகின்ற
    பட்சத்தில், காதில் கடுக்கனிடவும் மூக்கு முதலியவற்றில் நகையிடவும் சம்மதம் வருமா ? இப்படி விசாரித்துப்
    பிரபஞ்ச போதத்தின் கண் அலட்சியம் தோன்றினால், நிராசை உண்டாம், ஆதலால், சரியை,முதலிய
    சாதகம் நான்கில், நான்காவது இனத்தில் சரியை, கிரியை யோகம்,ஞானம் என்கின்ற நான்கில்
    மூன்றாவது படியாகி ஞானத்தில் யோகம் செய்கின்ற பலனாகிய நிராசை யென்னும் படி உண்டாகின்றது.
    ஆகையினாலே, இந்த விசாரத்திலிருந்து கொண்டிருங்கள்.


    இவ்விசாரஞ் செய்துகொண்டிருந்தால், ஆண்டவர் வந்தவுடனே கண்டமாக உங்களுக்குத்
    தெரிவிக்க வேண்டியதைத் தெரிவிப்பார். மறுபடியும் உங்களுக்கு உரிமை வந்தவுடனே அகண்டமாகத் தெரிவிப்பார்.
    ஆதலால் நீங்கள் இந்த முயற்சியிலிருங்கள். இரண்டரை வருஷமாக நான் சொல்லிக்கொண்டு வந்தேன்.
    இனிச் சொல்பவர்கள் சில நாள் தடைப்பட்டிருப்பார்கள். நீங்கள் இது வரைக்கும்
    இருந்தது போல் இராதீர்கள். இது கடைசி வார்த்தை. ஜாக்கிரதையாக மேற்சொன்ன பிரகாரம்
    விசாரஞ் செய்துகொண்டிருங்கள்.
    மேலும், சமய மதங்களில் தெய்வத்தினது உண்மையைக் குழூஉக்குறியால் குறித்து,
    அக்குறிப்பையும் வெளிப்படையாகத் காட்டாது சிவாயநம என்றும், நமசிவாய என்றும், இது
    போன்ற அனந்த வர்ணங்களைச் சேர்த்து ஒன்று, இரண்டு, மூன்று, ஐந்து, ஆறு, எட்டு, பத்து,
    பதின்மூன்று, பதினைந்து, பதினாறு இருபத்து நான்கு முதலிய சங்கையில் மந்திரங்களாய்
    அமைத்து வழங்கி வருவிக்கவிட்டு நடந்து வரகின்றது. அவ்வவ்மந்திரங்களின் அர்த்தம்
    பலவாக விரியும் ஆதலால்… நாம் அடைய வேண்டுவது முடிவான ஆன்மலாபமாகிய சிவானுபவமே
    யன்றி வேறில்லை.

    இங்குள்ள எல்லவர்க்கும் சுவர்க்க நரக விசாரமில்லை. சுவர்க்க நரக
    விசாரமுள்ளவர்கள் தங்கள் கருத்தின்படி பலவகைச் சாதனங்கள் செய்து அற்ப பிரயோஜனத்தை பெற்று,
    முடிவில் தடைப்பட்டுத் திருவருட்டுணையால் கருணை நன் முயற்சி யெடுத்துக் கொண்டு, பின் முடிவான
    சித்தி இன்பத்தைப் பெறுவார்கள். அஃது அருமை.
    இத்தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி, எல்லோரும் மேலான இன்பத்தை அடையும்
    பொருட்டு, முடிவான இன்பானுபவத்திற்குச் சாதக சகாயமான திருவருள் மகாவாக்கியத் திருமந்திரத்தை
    தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகாமந்திர வாக்கியத்தை–எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம்,
    எனது மெய்யறிவின்கண் அனுபவித்தெழுந்த உண்மையறிவனுபவானந்த இன்பத்தை
    நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம், திரிபு, மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து
    பொங்கிய ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன் குறிப்பிக்கின்றேன்; குறிப்பிப்பேன்.


    நமது ஆண்டவர் கட்டளை யிட்டது யாதெனில் நமக்கு முன் சாதனம் கருணை யானதினாலே,
    ஆண்டவர் முற்சாதனமாக
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


    என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார். தயவு, கருணை, அருள் என்பவை
    ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். பேரறிவேயாம்.


    இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத்
    தடையில்லை. ‘சந்தமும் வேதமொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும் ‘ என்னும் பிரமாணத்தால்
    உணர்க.


    மேலும், இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரியவொட்டாது, அசுத்த
    மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள். சுத்தமாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும்
    இல்லை. சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனபவமும்
    கேட்டறியாத கேள்வியும் நாம்கேட்டிருப்போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து
    வந்திருப்பார்கள் ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்
    தருணமே. ஆதலால் இத்தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்.


    இதற்குச் சாட்சியாக இப்போதுதான் சன்மார்க்கக் கொடி கட்டிக்கொண்டது.
    அக்கொடி இப்போதுதான் கட்டிக்கொண்டது.


    அக்கொடி உண்மையில் யாதெனில்; நமது நாபி
    முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடியிருக்கின்றது: அந்த நாடி நுனியில் புருவமத்தியின் உட்புறத்தில்
    ஒர் சவ்வு தொங்குகின்றது; அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்; மேற்புறம் மஞ்சள் வர்ணம்;
    அச்சவ்வின் கீழ் ஒர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது இக்கொடி நம் அனுபவத்தின்கண்
    விளங்கும். இவ்அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளி முகத்தில் அடையாள வர்ணமான
    கொடி கட்டியது. இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண்தோன்றும்.
    உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்துகொள்வாரில்லை.
    கொடி கட்டிக் கொண்டபடியால், இனி எல்லோரும் உண்மையை அறிந்துகொள்வார்கள். முன் உள்ளவர்கள்
    உண்மையைத் தெரியவொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். இத்தருணம் ஆண்டவரும்
    தெரிவித்தார். தெரிவிக்கின்றார், தெரிவிப்பார். நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இப்போது நான் சொல்லிவந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்துகொண்டிருங்கள்.
    அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான
    உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம்,
    சத்தியம், சத்தியம். இஃது ஆண்டவர் கட்டளை.


    எல்லோர்க்கும் தாய், தந்தை, அண்ணன், தம்பி, முதலான ஆப்தர்கள் செய்யபட்ட உதவி
    எவ்வளவோ, அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான
    இடம் இந்த இடம். (சித்திவளாகம் என்கின்ற மேட்டுக்குப்பம்) இஃது ஆண்டவர்
    கட்டளை.


    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


    திருச்சிற்றம்பலம்
    பேருபதேசம் முற்றிற்று







    நாராயணன் நாமத்தினாலும் ஆதிசேஷனனின் நாமத்தினாலும் நாராயணியின் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன்



    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி