--- இறைதூதர் ராமரின் உபதேசங்கள் ---
பக்தி சாதனத்தை சுருக்கமாக விளக்குகிறேன் பக்தி நெறியில் முதலாவது பின்பற்ற வேண்டியது இறைபயம் உள்ளோரின் கூட்டுறவை -- சத்சங்கத்தை நாடுவதுதான் !
இந்த உலகிலே என்னைப்புகழிடமாகக்கொண்டும் , என்னைத்தியானித்துக்கொண்டும் என்னுடைய புனித நாமத்தின் மூலமாக கடவுளை துதித்துக்கொண்டும் இருப்பவர்கள் என் காட்சியைப்பெறுவார்கள் . அவர்கள் கேளாமலேயே அவர்களுக்கு அந்த காட்சி கிட்டும் !
என்னிடம் ஆழ்ந்த பக்தி கொண்டும் ; சுத்த ஞானத்தை உடையவர்களாயும் பரம ஆனந்தத்தை அனுபவிப்பவர்களாயும் உள்ள யோகிகளைக்கண்டறிந்து அவர்களை குருவாக பின்பற்றுவோருக்கு மரணமில்லா பெருவாழ்வு கைக்கு எட்டி விட்டது என்றே நம்பலாம் !!
நீ ஆணாக இருந்தாலும் அல்லது பெண்ணாக இருந்தாலும் ஒரு பொருட்டே இல்லை ; ஜாதியும் பெயரும் பதவியும் பட்டமும் ஒன்றுக்கும் ஆகாது ! நீ வாழ்க்கையில் எந்த நிலையிலும் இருந்தாலும் கடவுளை வழிபட அவசியமான ஒரே ஒரு விசயம் பக்தி மட்டுமே ! யோகம் , தவம் ,தானம் ஆகியவற்றின் புன்னியபலமிருந்தும் ; வேதங்களை விசாரம் செய்வதனாலும் ,சாஸ்திரத்தில் விதிக்கபட்ட கர்மங்களை - சடங்காச்சாரமாக கடைபிடிப்பதாலும் ; வேதங்களில் உள்ள சட்டதிட்டங்களை நூல் பிசகாமல் கடைபிடிப்பதாலும் மட்டுமே ஒருவன் முழுமை அடைய முடியாது . அவன் யுகபுருஷன் என என்னை உணர்ந்து என் சற்குருத்துவத்திற்கு ஒப்புக்கொடுக்கும் போது மட்டுமே என் தரிசனம் அவனுக்கு வாய்க்கும் ; கடவுளைப்பற்றிய அனுபவம் சித்திக்கும் !!
கண் இருந்தும் இரவு நேரத்தில் தெளிவாக காணமுடியாதவை விளக்கு ஒன்று கிடைக்குமானால் தெளிவாக காணமுடிவதுபோல என்னிடம் பக்தி கொண்டுள்ளவர்களின் ஆத்துமாவானது சுயம் பிரகாசமடைந்து எதையும் தெளிவாக உணரத்தொடங்குகிறது - ஞானத்திற்குள் மூழ்குகிறது !!
பக்தியை வளர்த்துக்கொள்ளும் வழி இதோ உள்ளது :
என்னுடைய பக்தர்களுடன் சவகாசம் கொள்ளுவது , எனக்கு சேவை செய்வதாக கர்மங்களை ; கடமைகளை செய்துகொண்டிருப்பது , என்னுடைய மகிமைகளை கேட்பது ; படிப்பது , உள்ளார்ந்த பக்தியால் என்னை நேசிப்பது ; உணருவது , என் பெருமைகளைப்பாடுவது என்னுடைய எல்லா அவதாரங்களையும் நினைத்து நினைத்து நெகிழ்வது , ஒவ்வோர் அவதாரத்தின் உபதேசங்களையும் வாழ்வு வழிகாட்டல்களையும் கேட்டறிந்து கடைபிடிக்க முயலுவது ; ஒரு அவதாரத்தை போற்றி மற்ற அவதாரத்தை வெறுக்காமல் இருப்பது -- இந்த நல்வழிகளையெல்லாம் ஒருவன் தினந்தோறும் பின்பற்றி வந்தால் என் குருத்துவத்தால் அவன் சித்த சுத்தியையும் ஆத்தும சுத்தியையும் பெறுவான் !!
இவ்வாறாக என்னிடம் பக்தி கொண்டிருப்பவர்களுக்கு பாவசுத்திகரிப்பு உண்டாகி ஞானம் வந்து சேரும் ! தியாகமும் அஹிம்சையும் வாய்க்கும் ! பொறுமையும் அன்பும் மிளிரும் ; சாத்வீகத்தால் தெய்வீகம் பெருகி சகல மனுக்குலமும் ஈர்க்கப்பட்டு நல்லுபதேசம் நாடும் !! உபகுருத்துவமும் உண்டாகும் !!
முடிவாக பிறப்பு இறப்பு சக்கரத்திலிருந்து விடுபட்டு மரணமில்லா பெருவாழ்வு சித்திக்கும் !!
ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி