Total Pageviews

Sunday, March 8, 2015

வள்ளலாரின் ``அண்ட பிண்ட பூர்ண பாவன அனுஷ்டான விதி ``






அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என்கின்ற நாலிடத்திலும் கடவுட் பிரகாச முள்ளது. அதனில் காரியத்தாலுள்ள விபரம்:- பிண்டத்தில் அகம் ஆன்மா, ஒரு பொருளினது உண்மையைஅறிதல் ஆன்ம அறிவு. பிண்டத்தில் அகப்புறம் ஜீவன், ஒரு வஸ்துவின் பிரயோஜனத்தை யறிந்த அறிவே ஜீவ அறிவு. பிண்டத்தில் புறம் கரணம், ஒரு வஸ்துவின் நாமரூபத்தையும் குண குற்றங்களையும் விசாரித்தறிதல் கரணமாகிய மன அறிவு. பிண்டத்தில் புறப்புறம் கண் முதலிய இந்திரியங்கள், ஒரு பொருளினது நாம ரூப குண குற்றங்களை விசாரியாமல் அந்தப் பொருளைக்காணுதல் இந்திரியக்காட்சி, இந்திரிய அறிவு. இதுபோலவே கரணக்காட்சி, ஜீவக்காட்சி, ஆன்மக்காட்சியுமுண்டு.

இதுபோல், அண்டத்தில் அகம் அக்கினி, அண்டத்தில் அகப்புறம் சூரியன், அண்டத்தில் புறம் சந்திரன், அண்டத்தில் புறப்புறம் நக்ஷத்திரங்கள். ஆகவே பிண்டத்தில் நாலிடம் அண்டத்தில் நாலிடம் - ஆக எட்டிடத்திலும் கடவுட் பிரகாசம் காரியத்தாலுள்ளது. காரணத்தாலுள்ள இடம்:- பிண்டத்தில் புருவமத்தி, அண்டத்தில் பரமாகாசம். காரியகாரணமாயுள்ள இடம் நான்கு:- பிண்டத்தில் விந்து, நாதம். அண்டத்தில் மின்னல், இடி. சர்வயோனியிடத்தும், விந்து விளக்கமாகிய மின்ன லிடத்தும், நாத விளக்கமாகிய இடியிடத்தும்; இல்லாதது பாரொடு விண்ணாய்ப் பரந்ததோர் ஜோதி என்றும், ஜோதியுள் ஜோதியுள் ஜோதியாயும்... ... மேற் குறித்த அகமாகிய ஆன்மபிரகாசமே ஞானசபை,


இதுபோல் பிண்டத்தில் ஆன்மாகாசம் பொற்சபையென்றும், ஜீவாகாசம் ரஜிதசபை யென்றும் சொல்லுவது. ஆதலால் மேற்குறித்த இடங்கள் யாவற்றிலும் கடவுள் பூரண வியற்கை விளக்கம் காரியமாயும் காரணமாயும் காரியகாரணமாயும் இருக்கின்றது. முக்கிய இடங்களாகிய பிண்டத்தில் நாலும் அண்டத்தில் ஐந்தும் ஆகிய 9 இடத்திலும் கடவுள் விளக்கம் விசேஷ முள்ளது.


வள்ளலார் பிண்டத்தில் இரண்டு சபைகள் உள்ளதாக சுட்டியுள்ளார்

(வள்ளளாரின் உபதேசம் ) இதுபோல் பிண்டத்தில் ஆன்மாகாசம் பொற்சபையென்றும், ஜீவாகாசம் ரஜிதசபை யென்றும் சொல்லுவது.

ஒன்று சரீரத்தை மட்டுமே தான் என நம்பிக்கொண்டுள்ள ஜீவாத்மா என்கிற சிற்சபை . வள்ளலார் இந்த நிலையை ரஜோகுணம் உள்ளது என்கிறார் அதாவது ஜீவாகாசம் ரஜிதசபை . இவர்கள் எனக்குள்ளே இறைவன் உள்ளார் – இன்னும் கொஞ்சம் அழுத்தி சொன்னால் இறைவன் எனக்குள்ளே மட்டும்தான் உள்ளார் என்ற கொள்கை உள்ளவர்கள் .

இன்னொரு சபையும் உள்ளது . அது அண்டத்தில் உள்ள ஆன்மா அதாவது பரமாத்மா தனக்குள்ளும் ஜீவாத்மாவாக உறைகிறார் என்ற விரிந்த பார்வை உள்ளது . இந்த நிலையை வள்ளலார் பொற்சபை என்கிறார் அதாவது ஆன்மாகாசம் பொற்சபை

(வள்ளளாரின் உபதேசம் ) (அண்டத்தில் அகமாகிய ஆன்மபிரகாசமே ஞானசபை, அதுபோல பிண்டத்தில் ஆன்மபிரகாசம் பொற்சபை )

அண்டத்தில் பரமாத்மாவாக உள்ளது ஞானசபை என்றால் அதனோடு ஒத்திசைந்து அந்த பரமாத்மா எனது சரீரத்தில் ஜீவாத்மாவாக பின்னப்பட்டு பல குற்றம் குறைகளோடு வாழ்கிறார் என்பதை உணர்ந்த நிலை பொற்சபை

உத்தர ஞான சிதம்பரம் என வள்ளலார் குறிப்பிட்டுள்ள வடலூரில் ஒரு பக்தன் மேற்கு நோக்கி அதாவது மேலே நோக்கி நின்றால் ஞானசபை இருக்கும் . அவனின் இடப்புறமாக சிற்சபையும் வலப்புறமாக பொற்சபையும் இருக்கும்

சிதம்பரத்திலும் இதே நிலை உள்ளது . சிதம்பரம் சிவன் கோவிலில் உள்ள பெருமாள் கோவிலை ஒரு பக்தன் மேற்கு நோக்கி நின்று தரிசித்தால் அவனின் இடப்புறம் சிவன் ரஜோகுணம் உள்ள காளியோடு ஊர்த்தவ தாண்டவமும் வலப்புறம் சத்வ குணம் உள்ள சிவகாமியோடு ஆனந்த தாண்டவமும் ஆடுகிறார்


அதாவது மனித சரீரமாகிய சிவன் தனக்குள் உறையும் ஜீவாத்மா மட்டுமே கடவுள் என நம்பிக்கொண்டு கண்ட கண்ட யோகம் செய்து முன்னேறிவிடலாம் என நம்பிக்கொண்டிருக்கும் வரை அது சிற்சபையே . அதனால் பெரிய முன்னேற்றம் வந்துவிடாது

ஆனால் அதே ஜீவாத்மா அண்டத்தில் உள்ள பரமாத்மாவின் ஒரு பின்னம் என தன்னை உணரத்தொடங்கும்போது அதன் பார்வை சுயம் என்பதை கடந்து அகண்ட பார்வை உள்ளதாகிறது . இங்கு தனக்குள் மட்டும் உறையும் இறைவன் என்ற சுயம் கடந்து சகலத்திலும் அண்டத்திலும் உறையும் இறைவன் என்ற விஷிச்ட்டாத்வைதம் வெளிப்படுகிறது

அப்போது அந்த ஆத்மா சத்வகுணமுள்ள பொற்சபையாக மாற்றம் அடைகிறது

அவ்வாறு சிற்சபை தேய்ந்து பொற்சபை வளரவேண்டுமானால் அந்த ஆத்மாவிற்கு அண்டத்திலுள்ள பரமாத்மாவுடன் தொடர்பு பெருக வேண்டும் . பரமாத்மாவிலிருந்து அருள் கிட்டினாலோழிய சரீரத்தில் செய்யப்படும் யோகங்களால் மட்டுமே இது சாத்தியப்படாது . இப்போது ஞானம் பக்தியுடன் ஒருங்கிணைந்து ஞானபக்தியாக பரிணமிக்கிறது .

இவ்வாறு ஞானசபையை நோக்கி பிரார்த்தித்து பிரார்த்தித்து அண்டத்திலிருந்து வரும் அருளை நாம் பெருக்கிக்கொள்ளும்போது சிற்சபை தேய்ந்து பொற்சபை வளர்ந்தால் மட்டுமே ஞானசபையின் மூலமாக அண்டத்தையும் கடந்த அருட்பெருஞ்சோதியை தரிசிக்க முடியும்

(வள்ளளாரின் உபதேசம் ) ஆதலால் மேற்குறித்த இடங்கள் யாவற்றிலும் கடவுள் பூரண வியற்கை விளக்கம் காரியமாயும் காரணமாயும் காரியகாரணமாயும் இருக்கின்றது. முக்கிய இடங்களாகிய பிண்டத்தில் நாலும் அண்டத்தில் ஐந்தும் ஆகிய 9 இடத்திலும் கடவுள் விளக்கம் விசேஷ முள்ளது.

வள்ளலார் சைவ மரபில் வளர்ந்தவர் . வள்ளலாரின் இன்றைய சீடர்கள் பலரும் சைவமரபில் இருந்து சன்மார்க்க கொள்கை வெறியர்களாக மாறியவர்களே . அதனால் அவர் சைவத்தின் தவறுகளை சொல்லிக்கொள்ளாமல் களையெடுத்து சைவத்தை வைணவத்துடன் சமரசப்படுத்தினார் .

சைவத்தில் பரமாத்மா என்ற வார்த்தையே இல்லை . பசு , பதி , பாசம் என்று விளக்கம் சொல்வார்களே தவிர பரமாத்மா என்பதைப்பற்றி பேச மாட்டார்கள் ; காரணம் பரமாத்மா என்றால் அது நாராயணன் என்பது ஊர் அறிந்த உண்மை

சிதம்பரம் முதலான ஆதி கோவில்கள் அனைத்திலும் சிவன் கோவிலிலேயே பெருமாள் கோவிலும் பல இடங்களில் உள்ளதை கண்டு வருகிறேன்

ஆனால் பிற்காலத்தில் சைவ ;வைணவ பேதம் எப்படியோ வளர்ந்து விட்டது . சைவர்கள் பரமாத்மாவை – நாராயணனனை இருட்டடிப்பு செய்யத்தொடங்கி விட்டார்கள் . வைணவர்களும் சிவனை இருட்டடிப்பு செய்யத்தொடங்கினார்கள்.

இந்த காலகட்டத்தில் சைவத்திலிருந்து உன்னத ஞானத்தை எட்டிய வள்ளலார் சமரச வேதமாக சைவத்தில் நாராயணன் என்பதை ஞானசபை என்பதாக கொண்டுவந்து இணைத்து விட்டார் . அதுமட்டுமல்ல சைவத்துடனும் வைணவத்துடனும் ஆப்ராகமிய வேதங்களில் (யூதம் கிறிஸ்த்தவம் இசுலாம் ) சொல்லப்பட்ட அருவ ஏக இறைவனை அருட்பெருஞ்சோதி என்றும் அவரை ஞானசபையின் மூலமாக மட்டுமே தரிசிக்க முடியும் என்றும் வழிபட வைத்தார்

அருட்பெருஞ்சோதி என்பவர் சிவனுமல்ல ; நாராயணனுமல்ல அவர்களையும் விட பெரிய அவர்களையும் படைத்த முழுமுதல் கடவுள் என்பது ஞானமுள்ளோர்க்கு. தெளியக்கூடியது . இவர் ஆப்ராகாமிய வேதங்களில் வெளிப்பட்ட அதே இறைவனே . இங்குதான் வள்ளல் பெருமானின் சமரச வேதம் வெளிப்படையாகி உள்ளது .


இந்த இறைவன் பிண்டத்தில் நாலு அண்டத்தில் நாலு ஆக எட்டிற்கும் அப்பாற்பட்டவர் என்பதால் அண்டத்தில் ஐந்து என வள்ளலார் சுட்டியுள்ளதை கவனிக்கவும்

(வள்ளளாரின் உபதேசம் ) முக்கிய இடங்களாகிய பிண்டத்தில் நாலும் அண்டத்தில் ஐந்தும் ஆகிய 9 இடத்திலும் கடவுள் விளக்கம் விசேஷ முள்ளது.


உலகில் இதுவரை இறைவனின் புறத்திலிருந்து ஆங்காங்கு பல நாடுகளில் பகுதி பகுதியாக வெளியாக்கப்பட்ட வேதங்களை ஆறு பெரும்பிரிவுகளாக பிரிக்கலாம் . அதாவது சன்மார்க்கங்கள் . சன் என்றால் ஆறு . ஞானத்தின் தேவதையாகிய முருகன் சண்முகன் – அதாவது ஆறு மார்க்கங்களும் அவனது வெளிப்பாடே . வள்ளலார் ஆதியில் முருகனை நிலைக்கண்ணாடியில் கண்டவர் – அவரின் ஆதிக்கத்தில் ஞானத்தில் வளர்ந்தவர் என்பதை மறக்கலாகாது

ஆகவேதான் தனது அமைப்பிற்கு சமரச சத்திய சன்மார்க்க சங்கம் என்று பெயர் வைத்தார்

இந்த சமரச சத்தியம் என்பதற்கு விளக்கம் என்ன என விணவியபோது அதற்குரிய காலம் இப்போது கணியவில்லை ; அதற்கு உரியவர் வடலூருக்கு தெற்கே பிறந்து வடலூருக்கு வருவார் என்றும் தெரிவித்தார் அவர்காலத்தில் அது பிரபலமாகும் என்பதும் அவர் வாக்கு

ஏனென்றால் அந்த காலகட்டத்தில் சைவத்தில் வைணவத்தையும் ஆப்ரகாமிய வேதங்களையும் இணைத்துள்ளேன் என வெளிப்படையாக தெரிவித்தால் இன்றைய சீடர்களான பல சன்மார்க்க குடும்பத்தினர் வள்ளலாரை விட்டு விலகி சென்றிருக்கும் வாய்ப்பு இருந்தது . வள்ளலாரை புரிந்துகொள்ளும் தகுதி அவரை சுற்றியிருந்தோருக்கு போதிய அளவு இல்லை என்பதை அவர் பலமுறை வெளிப்படுத்தியுள்ளார்

நான் சொன்னதை எள்ளளவும் நீங்கள் புரிந்துகொள்ளவில்லை ஆனால் வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் மேற்கிருந்தும் கிழக்கிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் பலர் வந்து இந்த உண்மையை புரிந்துகொள்வார்கள் என்பது அவரின் கடைசி வாக்கியங்களில் ஒன்று .

அந்த நபர்கள் பல மார்க்கங்களிளிருந்தும் வள்ளலாரை நாடி வந்து சமரச சத்தியம் என்ற சமரச வேதத்தை உயர்த்திப்பிடிப்பார்கள் ; அதற்கான நாள் கணிந்துகொண்டுள்ளது

உலகம் முழுதும் அனைத்து மார்க்கங்களையும் வேதங்களையும் சமரசப்படுத்தும் ஆன்மீக பேரலை ஒன்று அதற்கான வழிகாட்டியை எதிர்பார்த்து காத்திருக்கிறது . அவர் மதுரையில் காந்தியின் மறுபிறவியாக பிறப்பெடுப்பார் . அவர் வடலூருக்கு வந்து இறைவனின் சகல அருட்கொடைகளையும் பெற்று சகல உண்மைகளையும் தெளிந்தவராக அந்த மாபெரும் இயக்கத்திற்கு தலைமை ஏற்பார் . அந்த நாளில் வள்ளலாரே அவரை வெளிப்படுத்தி சித்தி வளாகத்தில் அவரை தலைமைப்பதியாக உயர்த்தி வைப்பார் ; அப்போது சன்மார்க்க இயக்கங்கள் அனைத்தும் சந்தேகம் இல்லாமல் அவரை தலைவராக ஏற்றுக்கொண்டு உலகை சீர்திருத்தும் சமாதானப்பணியில் முன்னணியில் தொண்டாற்றும்

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்

ஓம் நமோ சிவாய

சேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்

ஓம் நமோ சேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்

ஓம் நமோ நாராயணியாய


அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


  




No comments:

Post a Comment