Total Pageviews

Sunday, January 6, 2013

உண்மையை உணர்க !!



--- யுகபுருஷன் இறைதூதர் ராமரின் உபதேசங்கள் ---


சேர்த்துவைத்த செல்வம் யாவும் ஒரு நாள் ஒன்றுமில்லாமல் அழியக்கூடியவை . உயர்ந்து நின்றவை ஒரு காலத்தில் சரிந்து தரை மட்டமாகின்றன . எவ்வளவுக்கெவ்வளவு நெருங்கி பழகுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு பிரிவு நிச்சயம் . சேர்ந்திருந்தவை ஒரு நாள் பிரிந்து விடுகிறது . எத்தகைய வாழ்க்கையும் மரணத்தை முடிவாக கொண்டது .

பழுத்து கனிந்த பழம் தரையில் வீழ்ந்து தான் ஆக வேண்டும் . அதுபோல் பூமியில் பிறந்த மனிதனும் இறந்துதான் ஆகவேண்டும் . இறப்பது நிச்சயம் ; இருப்பது நிச்சயமில்லை !
எவ்வளவு உருதியாக வீட்டைக்கட்டினாலும் காலப்போக்கில் வீடு இடிந்து அழிவதுபோல நாளடைவில் மூப்புக்கும் மரணத்துக்கும் வசமாகி முடிவெய்துகிறான் !

கோடைக்காலத்தில் சூரியனின் செங்கிரணங்கள் தண்ணீரை வற்ற செய்வதுபோல இரவும் பகலும் மாறிமாறி வந்து உலகிலுள்ள உயிரிணங்களின் ஆயுளை அபகரித்து செல்லுகின்றன .!
சூரியன் உதிக்கும் போது , ``பொழுது விடிந்துவிட்டது ; வேலை செய்து பணம் சம்பாதிக்கலாம் `` என்று மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் . சூரியன் மறையும் போதும் , `` சம்பாதித்ததை கொண்டு சுகமாயிருக்கலாம் `` என்று மகிழ்கிறார்கள் . ஆனால் சூரிய உதயம் மற்றும் மறைவின் போது தன் வாழ்நாளில் ஒரு நாள் குறைந்து விட்டது என்பதை உணர்வதில்லை !

ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருக்கும் புதிய புதிய பருவ காலத்தின் ஆரம்பத்தை கண்டு மனிதன் மகிழ்கிறான் . ஆனால் தன் ஆயுட்காலமும் கழிவதை அவன் உணர்வதில்லை !

கடலில் வெவ்வேறான இடங்களில் மிதந்த இரண்டு கட்டைகள் எப்போதோ ஒன்று கூடுகின்றன . சிறிது நேரம் சேர்ந்தவாறே மிதந்தும் செல்லுகின்றன . பிறகு பிரிந்தும் சென்றுவிடுகின்றன . அதுபோலத்தான் மனைவி , மக்கள் , சுற்றத்தார் , செல்வம் யாவும் ஒன்று சேர வேண்டிய காலத்தில் ஒன்று சேருகின்றனர் ; பிரிய வேண்டிய காலத்தில் பிரிந்தும் விடுகின்றனர் !

சேர்க்கை எவ்வாறு நிகழ்கிறதோ அதுபோல பிரிவும் நிகழ்கிறது !

இயற்கையை மீறுவது என்பது யாராலும் முடியாது ! உயிரிணங்கள் தோன்றியபடியே இருப்பதில்லை ; முதுமையடைந்து இறந்துவிடும் !

இறந்ததை எண்ணி வருந்தலாமே தவிர திரும்ப கொண்டுவர மனிதரால் இயலாது . தன்னுடைய முறை வரும்போது மரணத்திலிருந்து தப்பித்துக்கொள்ளவும் முடியாது !
ஒரு யாத்திரை கூட்டத்தை பார்த்த வழிப்போக்கன் , `` நானும் உங்களுடன் வருகிறேன் `` என்று சொல்லி அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுகிறான் . அதிலிருந்து சிலர் பிரிந்தும் விடுகிறனர் . ஒரு நாள் அவனும் பிரிந்து விடுகிறான் . பின்னர் வேறொரு கூட்டத்திலும் சேர்ந்து கொள்ளுகிறான் !

அதுபோல நம்முடைய பெற்றோரும் பாட்டன்மார்களும் ஏற்கனவே இந்த கூட்டத்தில் சேர்ந்து பிரிதும் விட்டனர் ! நாமும் ஒரு நாள் பிரியத்தான் வேண்டும் . பின்பு வேறோர் பிறவியில் வேறொரு கூட்டத்தில் இருப்போம் . ஆகையால் பிரிவால் வருந்துவதால் என்ன பயன் ? இதில் புலம்புவதற்கு என்ன இருக்கிறது ?

ஆற்று வெள்ளத்தைப்போலவே ஆயுள் எப்போதும் ஒரு திசையில் போய்க்கொண்டுள்ளது . அது திசை மாறி வந்த வழியில் பாய்வது ஒருபோதும் நடவாது . மனிதனின் ஆயுட்காலமும் இடைவிடாமல் சுருங்கிக்கொண்டே இருக்கிறது . மரணத்தை தடுக்கவே முடியாது . இடையில் மனிதர்கள் அற்ப சந்தோசத்தை நாடி ஓடுகிறார்கள் . சந்தோசம் வேண்டும் ; அதை தர்ம வழியில் மட்டுமே பெற முயலவேண்டும் ! அதர்ம வழியில் பெற்ற சந்தோசம் ஒரு நாள் - ஒரு பிறவியில் துனபத்தை கொண்டுவந்தே தீரும் !

கிடைத்ததைக் கொண்டு மகிழ்பவர்களே நீடிய சுகத்தை அடைந்தவராவார் ! இருப்பதில் திருப்தியுற்றிரு ! இல்லாததில் நோகாதிரு ! கடவுளிடம் கேள் ! கிடைத்ததில் மகிழ்வுற்றிரு !! நன்றி செலுத்த கற்றுக்கொள் !!